நாமக்கல் அடுத்த பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஜேடர்பாளையம் தடுப்பணை பூங்கா எதிரே நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் தலைமையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றையொட்டி ராஜவாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மூலம் ஜேடர்பாளையம் தொடங்கி பரமத்தி வேலூர், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்துார் வரை 25 ஆயிர ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறந்துவிடப்படும். மார்ச் மாதம் வெறும் 15 நாட்கள் மட்டும் வாய்க்கால் பராமரிப்புப் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படும். எனினும், இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 3 முறை தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி 3-வது முறையாக ராஜவாய்க்காலில் நிறுத்தப்பட்ட தண்ணீர் இதுவரை திறந்து விடப்படவில்லை. இதனைக்கண்டித்தும், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஜேடர்பாளையம் தடுப்பணை பூங்கா எதிரில் நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) எம்.பி மாதேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாதேஸ்வரன், “ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பாசன விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் ஓராண்டுக்கு மேல் உள்ளவை. அவை தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. அவற்றுக்கு உரிய காலத்தில் தண்ணீர் வழங்காவிட்டால் பயிர்களை மீட்டெக்க முடியாது.
எங்களது போராட்டத்திற்கு அரசு தொடர்ந்து செவி சாய்க்கவில்லை என்றால் இதே இடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும். கொமதேக சட்டப்பேரவை உறுப்பினர் நித்யானந்தன் இப்பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசியுள்ளார். இருப்பினும் அரசு செவி சாய்க்காமல் உள்ளது” என்று எம்பி மாதேஸ்வரன் தெரிவித்தார்.