“நீதி வென்றது. எந்த காரணத்தைக் கொண்டும், திமுக தொண்டனாக, எப்போதும் எதற்கும் அஞ்ச மாட்டோம். இது தான் திமுக வரலாறு. எந்த வகையிலும் எங்களை வீழ்த்திவிடலாம் என்று கனவு காணாதீர்கள். அது ஒருபோதும் நடக்காது. ஏறக்குறைய 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி விழுந்துவிடும்” என்று தனது 73 வயதில் ரக்கட் பாயாய் அனிதா ராதாகிருஷ்ணன் சிலாகித்தார்.
மதுரை மேலமாசி வீதியில் மிகவும் பிரபலமான “அனிதா மெட்டல்ஸ்” என்ற பெயரில் பாத்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார். வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் “அனிதா மெட்டல்ஸ் ராதாகிருஷ்ணன்” என்று ராதாகிருஷ்ணனை அழைக்கத் தொடக்க நாளடைவில் அந்தப் பெயர் சுருங்கி “அனிதா ராதாகிருஷ்ணன்” என்றே நிலைத்துவிட்டது. அந்த அடையாளமே அவரது அரசியல் வாழ்க்கையிலும் தொடர்கிறது.
அந்தக் காலத்தில் மதுரை மேலமாசி வீதி என்பது மார்க்கெட் மட்டுமில்லை. தமிழக அரசிலை மாற்றிய கூட்டங்கள் நடக்கும் பொதுக்கூட்ட மைதானங்களில் ஒன்றாகவும் அது இருந்தது. அங்கு அடிக்கடி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், தலைவர்களின் பிரச்சாரங்கள் என நிகழ்ச்சிகள் எப்போது பரபரப்பாகவே இருக்கும் மேலமாசி வீதியில் நடக்கும் கூட்டங்களை தனது கடையில் இருந்தபடியே பல முக்கிய தலைவர்களின் பேச்சுகளை கேட்ட ராதாகிருஷ்ணனுக்கு அரசியலின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர் காளிமுத்துவின் அரசியல் அணுகுமுறை, மேடைப் பேச்சு, தொண்டர்களுடன் பழகும் விதம் ஆகியவை ராதாகிருஷ்ணனை மிகவும் கவர காளிமுத்துடன் நெருக்கமான நட்பு உருவானது. காளிமுத்துவின் மூலம் “அனிதா மெட்டல்ஸ் ராதாகிருஷ்ணன்” அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க காலப்போக்கில் “அனிதா ராதாகிருஷ்ணன்” ஆனால். பின்னர் அரசியல் சூழல்கள் மாறிய நிலையில் திமுகவில் இணைந்து முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் எதுவும் இல்லாத தமிழக அரசியலில் மிகவும் அரிதான தலைவர். பார்ப்பதற்கு ‘ரக்கட் பாய்’ மாதிரியும், மேடைகளில் ஆவேசமாக பேசும் அனிதா ராதாகிருஷ்ணன் சாந்த குணம் கொண்டவர் என்று அதிமுக மற்றும் திமுக என இரு கட்சி நிர்வாகிகளுமே பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு விஷயம்.

தமிழகத்தில் புதிதாக தவெக பதவி ஏற்ற 40 நாட்களில் நாளுக்கு நாள் வன்கொடுமை, கொலைகள் என அரங்கேறி சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீரழிந்துள்ளது. ஆகையால்,பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதற்கும் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான திமுக வாய் திறங்க முதல்வரே என குரல் கொடுத்தது.
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய ஜோசப் விஜய், “ஊரில் ஒரு பெரியவர், வெயில் அதிகமாக இருந்ததால், கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு சுற்றி தேடிக்கொண்டிருந்தாராம். அப்போது கூட இருந்த சின்ன பையன், என்ன தேடுறீங்க என கேட்டபோது, அந்தப் பெரியவர், இல்லை தம்பி உங்க அப்பா இங்கத்தான் இருப்பாருனு சொன்னாங்க; அதான் தேடுறேன். எங்க உங்க அப்பாவையே காணோம்” என்றாராம் எனத் தெரிவித்து, எங்களுக்கு நெக்கலும், நயாண்டியாக பேச தெரியும்” என ஜோசப் விஜய் பெரும் விவாதப் பொருளாக மாறியது .
“வழக்கமாக சினிமா மேடைகளிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குட்டி கதை சொல்லி வந்தவர், இன்று சட்டப்பேரவையில் அப்பாவை பற்றி ஒரு குட்டி கதை சொல்லி இருக்கிறார். உங்கள் அப்பாவை நீங்கள் எப்படி வைத்திருந்தீர்கள் என அவரே வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதுபோல், ‘கணவனை காணவில்லை என மனைவி செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு’ தொடர்ந்து இருக்கிறார். அப்பாவை காணாமல் மகனும், மகளும் தவித்துப்போய் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்ச்சித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி சட்டமன்றத்தில் கிண்டல் செய்ததாக திமுகவினர் முதல்வரை கட்டம் கட்டி விமர்ச்சித்தனர். கடந்த ஜூன் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதோடு, ஒருமையில் பேசியதாக கூறி தவெக நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் BNSS பிரிவு 35(3), (CrPC 41A) கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், ஆளும் கட்சியினரின் மேல் பொதுமக்களின் அதிருப்தி குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்துப் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதால் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்ய விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது.
அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சற்று நேரத்திலேயே தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்பிறகு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 5 மணிநேரதிற்கும் மேலாக விசாரிக்க மாலை 6 மணிக்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, “திமுகவை மிரட்டி பயம் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். என்னிடம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்கு சப்போர்ட் செய்வோம் என்று சொன்னார்கள். நாங்கள் வந்து எதற்கும் பயப்படமாட்டோம். இன்று வந்த கட்சிக்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? எங்களின் கட்சி தலைவர் தைரியமாக இருக்க வேண்டும்” என்று சொல்லியுள்ளார்.
அந்த தைரியத்தில் எதை வேண்டுமானாலும் சந்திக்க தயார். குதிரை இல்லை. ஒட்டக பேரம் பேசினார்கள். அது நடக்காது. நான் முதல் போட்டு முதலமைச்சராக இல்லை. நான் என்னுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் தொண்டனாக இருக்கிறேன். எதற்கும் அச்சப்படமாட்டேன். ‘ஏ’ நோட்டீஸ் எனக்கு கொடுத்தார்கள். அதனை என்னுடைய வழக்கறிஞர் வாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் என்பதால் சென்னையில் இருப்பதால் 10-ந் தேதி வந்து காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினோம். அங்கு தீர்ப்பு வந்தது. அது வந்தவுடன் என்னை கைது செய்து உள்ளே அனுப்பிவிட வேண்டும். பயம்காட்ட வேண்டும் என்று செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.
இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் 6 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். நான் சவால் விட்டு சொல்கிறேன். நான் இருக்கும் திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் சுப்பிரமணியசுவாமி மீது சத்தியமாக சொல்கிறேன் இந்த ஆட்சி 6 மாதத்துக்கு மேல் இருக்காது. இருக்கவும் விடமாட்டோம்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
இந்த சூழலில் காவல்துறையினர் நாள் முழுவதும் அனிதா ராதாகிருஷ்ணனை அலைக்கழித்து இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வர வேண்டும் என்று கூறி 2 முறை சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவ காரணங்களை காட்டி வரும் 10-ந் தேதி ஆஜராவதாக கூறினார்கள்.
இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிட்டார். அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இந்த வழக்கில் சிறையில் அடைக்க வேண்டிய முகாந்திரம் இல்லை. உண்மையிலேயே அவருக்கு மருத்துவ பிரச்சனை உள்ளது. தற்போது அரசியல் காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும். அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு ஏற்ப நேரில் ஆஜரானார். கைது நடவடிக்கையிலும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் படி, 41A நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த உத்தரவின் கீழ் நடந்து கொண்ட ஒருவரை காவல்துறை கைது செய்ய முடியாது. மேலும் கைது நடவடிக்கை ஏன் அவசியம் என்று எழுத்துப்பூர்வமாக காவல்துறையின் காரணங்களை முன்வைக்காத வரை குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய முடியாது என்று சுமார் 2 மணி நேரம் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான வாதத்தை வைத்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தனது சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார். அதன்படி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்த வேண்டும். 10 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
ஜாமீனில் வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”எந்த காலத்திலும் யாருக்கும் திமுகாரரன் அஞ்சமாட்டோம் என்பதற்கான வரலாறு இது. ஆகவே எந்த வகையிலும் எங்களை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண முடியாது. ஏறக்குறைய 6 மாத காலத்துக்குள் இந்த ஆட்சி வீழ்ந்துவிடும்” என 73 வயதில் அனிதா ராதாகிருஷ்ணன் ரக்கட் பாயாய் சிலாகித்தது திமுக உடன்பிறப்புகள் கைகளை தட்டி, விசிலடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.