சேலம் மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வின் போது நடந்த முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக CEO மகேஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், முத்தம்பட்டியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த மார்ச் 17-ந் தேதி +2 கணிதத்தேர்வு நடந்தது. அப்போது, அப்பள்ளி மாணவர்கள், அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்தனர். இதை கவனித்த, முதன்மை கண்காணிப்பாளராக பணிபுரிந்த, மேட்டுப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீராம், கழிப்பறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு, அதே பள்ளியை சேர்ந்த இரு ஆசிரியர்கள், மொபைல் போனில் பேசியபடியும், வினாத்தாள்களை முன்கூட்டியே, ‘லீக்’ செய்து, அதற்கான விடைகளை கழிப்பறையில் ஒட்டி இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அன்று மாலை எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தார்.

ஆனால், இந்த விவகாரத்தை மறைக்க, தனியார் பள்ளியிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேரம் பேசி வருவதாக ஏப்ரல் 9-ந் தேதி நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை சார்பில், சேலம் மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் குப்புசாமி, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பி இருந்தது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர் நிலையிலான 6 அலுவலர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, CEO-க்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதில், சேலம் மாவட்ட CEO-வாக இருந்த மகேஸ்வரி, தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இருந்த எல்லப்பன், சேலம் மாவட்ட CEO-வாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மாற்றப்பட்டுள்ள சேலம் மாவட்ட CEO மகேஸ்வரி, கடந்த நவம்பர் மாதம் தான் அப்பொறுப்பினை ஏற்றார். தற்போது இடமாறுதல் செய்யப்பட்டுள்ள 6 பேரில், 5 பேருக்கு CEO பொறுப்பே பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், CEO மகேஸ்வரிக்கு மட்டும் டம்மியாக கருதப்படும், துணை இணை இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
CEO மகேஸ்வரியை இடமாற்றம் செய்வதற்கான ஆணை, நேற்று மாலை வெளியானது. இதனையடுத்து, CEO அலுவலகத்திற்கு வந்த அவர், அவசர அவசரமாக ஏற்கனவே பெற்ற `கவனிப்புக்காக’ அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணி நியமனம், சஸ்பெண்ட் ரத்து, பிற அனுமதி சார்ந்த 6 கோப்புகளில் கையெழுத்திட முயன்றார். இதற்கான கோப்புகளை கேட்ட போது, அங்கிருந்த கண்காணிப்பாளர் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது பெண் நேர்முக உதவியாளரை அழைத்து கோப்புகளை எடுத்து வருமாறு கூறினார். ஆனால், தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வருமோ என்று நினைத்த அதிகாரிகள், கோப்புகளை மறைத்து வைத்தனர். இதனால், விரக்தியடைந்த CEO மகேஸ்வரி, தனது டேபிளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து உடைத்தெறிந்து விட்டு, ஆவேசத்துடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.