திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட சுக்கிரகாரகட்டளை பகுதியில் மூங்கில் மரத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து பறந்த தீப்பொறி கூரை வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியதில், வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட சுக்கிரகாரகட்டளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலு விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். தற்போது வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி செல்வி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த மூங்கில் மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது மூங்கில் மரத்தில் இருந்து பறந்த தீப்பொறிகள் அருகில் இருந்த செல்வியின் கூரை வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியது. தீ வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த செல்வி, புகை மற்றும் தீ வெப்பத்தை உணர்ந்து அதிர்ச்சியடைந்து அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றதுடன், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.