நயினார் நாகேந்திரன்: துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்திய தவெகவிற்கு கண்டனம்!
தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல், மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் அலுவலகத் திறப்பு விழாவின் போது, அங்கு கழற்றிப் போடப்பட்ட காலணிகளைத் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் அள்ளி அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களை இத்தகைய இழிவான முறையில் நடத்தியிருப்பது, அவர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயலாகும்; இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? எளிய மக்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்காத இவர்களின் செயல், இவர்கள் பேசும் கொள்கைகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் தான் என்பதைக் காட்டுகிறது.
எனவே, இந்த அவலச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்கள் மத்தியில் வெற்று அரசியல் பேசாமல், தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என நைனார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.