தேனி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாத காலகட்டத்தில் தேவராஜ் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது, தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரிடம் இருந்து தேவராஜ் ‘ஜிபே’ மூலம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியாவுக்கு புகாராக போனது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் புகாரில் முகாந்திரம் இருந்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தேவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை, பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன் உத்தரவிட்டார். உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் காவல்துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.