கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை இழுத்துச் சென்ற விஜய் போராடினால் அடிக்கிறார்கள், யார் பெற்ற பிள்ளையோ என்று நினைத்துதானே அடிக்கிறீர்கள். அனிதா வீட்டுக்கு மறைமுகமாக செல்வார்கள்… ஆனால் தீர்வு தர மாட்டார்கள் என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித், வெற்றிமாறன், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வரன், பாடகர் அறிவு, நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகைகள் ரேவதி, சுஹாசினி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் அமீர் பேசுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக 10 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். அனிதாவின் மரணத்தில் தொடங்கிய ஓலம் இன்று வரை நிற்கவே இல்லை. அனிதா வீட்டுக்கு மறைமுகமாக செல்வார்கள், ஆனால் தீர்வு தர மாட்டார்கள். கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை விஜய் இழுத்துச் சென்றார்.
போராடினால் அடிக்கிறார்கள், போராடுபவர்கள் என்ன கலவரக்காரர்களா? மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துகிறார்கள்; மாணவர்கள் என்ன தவறு செய்தனர்? யார் பெற்ற பிள்ளையோ என்று நினைத்துதானே அடிக்கிறீர்கள். பெண் பிள்ளைகளை தாக்குபவர்கள்தான் பாரத மாதா பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
எப்போதும் போராட்டம் நடத்துபவர்கள் நிராயுதபாணிகளாகவே உள்ளனர். போராட்டத்தை தடுக்க வரும் காவல்துறையினர்தான் தடி, கண்ணீர் புகை குண்டு, கவசம் என எடுத்து வருகிறார்கள். கேரளத்தில் இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்கும் காங்கிரஸ் அரசு, டெல்லியில் போராடுகிறது.
ஜனநாயகத்தை காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது; இதேவேளையில் அங்கே ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம்; ஆனால் இந்தக் கூட்டம் அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என அமீர் தெரிவித்தார்.