நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மற்றொரு விசாரணை கைதி உயிரிழந்து இருக்கும் சம்பவம் தவெக அரசுக்கு எதிராக புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் ஜானகிராமன் தெருவை சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் பாலாஜி. இவரது கடையில் கடந்த 12-ந் தேதி அதிரடி சோதனையை காவல்துறையினர் மேறகொண்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்கா பொருட்களை விற்றதாக கூறி, பாலாஜியையும் அவருடன் மேலும் ஒருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர்.
புழல் சிறையில் விசாரணை கைதிகளின் அறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜிக்கு இன்று காலை 7.45 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனே அவரை காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிறையில் காவலர்கள் தாக்கியதால்தான் பாலாஜி உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்கெனவே நாகர்கோவில் கிளை சிறை மரணம், தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்து, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த விஜய், தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த மரணம் தொடர்பாக எதையும் பேசாதது ஏன்? நாகர்கோவிலை தொடர்ந்து தற்போது புழல் சிறையிலும் மரணம் ஏற்பட்டிருக்கிறதே! இதைபற்றி எல்லாம் ஏன் முதல்வர் பேச மறுக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.