234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற முழக்கத்துடன் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மெரினாவில் கலைவிழாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் நேரடி விவாதங்கள் மூலம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ‘வீட்டுக்கு வீடு’ என்ற பிரச்சார வியூகத்துடன் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக கூட்டணி களமிறங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்கி, திமுக ஆட்சியின் குறைகளை முன்வைத்து, திமுக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு இடையில், படித்தவன், படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை’, இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்ற வாக்குறுதிகளுடன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இளம் வாக்காளர்களை குறிவைத்து புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் களமிறங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோயில், அதியமான்கோட்டை என 2 முக்கிய இடங்களும் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய 2 ஒன்றியங்கள், தருமபுரி நகராட்சி மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, நாதக வேட்பாளர் சாந்தலட்சுமி மற்றும் தவெக வேட்பாளர் எம்.சிவன் ஆகியோருடன் நான்கு முனைப் போட்டியில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி.
இந்த, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் 129393 ஆண் வாக்காளர்கள், 128464 பெண் வாக்காளர்கள் மற்றும் 82 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 257939 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி சட்டப் பேரவை தொகுதி 18 முறை பொதுத் தேர்தலையும், 1965-ல் இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி அவர்களை 26860 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்தச் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேராமல் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், இந்த தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதால் வெற்றி சுலபம் என்று கணக்கிட்டு தருமபுரியைக் குறிவைத்து கிருஷ்ணசாமியின் மகள், முன்னாள் எம்.பி விஷ்ணு பிரசாத்தின் சகோதரி, பாமக தலைவர் அன்புமணியின் மனைவி எனப் பல அடையாளங்கள்கொண்ட சௌமியா அன்புமணி களமிறங்கி யிருக்கிறார்.
தற்போது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக-வின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர், ஏற்கெனவே தருமபுரி நகராட்சி தலைவர், தருமபுரி எம்.எல்.ஏ, தருமபுரி எம்.பி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர். மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் பரிச்சயம், கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றுடன் அதிகாலையிலேயே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார்.

இவர்கள் தவிர, நாதக வேட்பாளர் சாந்தலட்சுமி, தவெக வேட்பாளர் சிவன், பாமக (ராமதாஸ் அணி) வேட்பாளர் சரவணன் ஆகியோரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான இளங்கோவன், சௌமியா அன்புமணி ஆகியோருக்கு இடையில் தான் வலுவான போட்டி நிலவுகிறது. ஆகையால், தருமபுரி தொகுதியில் சூரியன் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்த இலையின் உதவியால் மாம்பழம் கனிய அதிகம் வாய்ப்பு உள்ளது.