திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக நகர நிர்வாகத்தின் சார்பில் திமுக நகரச் செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திருவாரூர் திருக்குவளையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி பிறந்து “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே”.. என்ற சொல்லில் திமுக தொண்டர்களை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாய் கட்டிப்போட்ட மந்திரச் சொலுக்கு சொந்தக்காரர் பின்னாளில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முகமாக கலைஞர் கருணாநிதி மாறியவர்.
பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் தமிழகத்தின் தலையெழுத்தாய் மாற்றி 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் திமுக தலைவர், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ந் தேதி காலமானார்.
ஓய்வறியாத உழைப்பாளி, ஒப்பற்ற படைப்பாளியான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி இன்று காலை 8 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது.

இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக நகர நிர்வாகத்தின் சார்பில் திமுக நகரச் செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிக்கந்தர், கட்சியின் கவுன்சிலர்கள், வார்டு நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் போக்குவரத்து கழக அருகில் அருணகிரி தலைமையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.