இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” என தூத்துக்குடி தொகுதி மக்களவை எம்பி கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி, அதனை கடை திறக்காத நேரம் மற்றும் இரவில் கூடுதல் விலைக்கு விற்றுவந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாநகரம் தென்பாகம் காவல்துறையினர் கடந்த 17-ந் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்களாம்.

இந்நிலையில் விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி மாநகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் தான்கன்னியாகுமரியைச் சேர்ந்த சபரிவர்மன் , என்ற மாற்றுத்திறனாளி, குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். அவரது உடலில் 19 காயங்களில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் இன்னொரு காவல் மரணம் நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இது குறித்து கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” என கனிமொழி கருணாநிதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.