L. Murugan “விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி..!”

சென்னை குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார்.இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை தந்துள்ளார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.

முதலமைச்சரையும், துணை முதலமைச்சராக வர துடித்து கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எஸ்சி, எஸ்டி விடுதியை பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக் கூடியது. பெரிய தேசம் யார் வேண்டுமானாலும் ஆளலாம். பல்வேறு சூழ்நிலை காரணமாக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் இல்லை. மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வருகிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஈவேராவிற்கு மாலை செலுத்தினார். விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சொல்லக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அவர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்..!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.

சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamilisai Soundararajan: விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார்..!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

கருணாஸ்: “விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம்…! ”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். இப்போதைய நிலையில் விஜய் கூட தனித்து நிற்க முடியாது. நான் தனித்து நின்றால் நானும் எனது மனைவியும் தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது தான் களத்தில் யதார்த்தம் என கருணாஸ் தெரிவித்தார்.

ஹெச்.ராஜா: திராவிட கட்சிகளின் வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார்..!

விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

ரோஜா அதிரடி: சிரஞ்சீவி கட்சியில் சேராத நான்..! விஜய் கட்சியில் சேருவேனா…!

கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி நடிகை ரோஜா வகித்தவர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதியான நகரியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றவர்.

ஜெகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ரோஜா, 2024-ல் நடந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அத்தேர்தலில் ஜெகனின் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் என்னவானார்கள் என மக்கள் கேட்கும் அளவிற்கு அவர்கள் மக்களிடமிருந்து தூரமாகி விட்டனர்.

இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ கான பேட்டியில் ரோஜா பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நீங்கள் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா? இது தெலுங்கு தேசம் கட்சியின் பொய் பிரச்சாரம். நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும்? எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கூட இல்லை.

பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி தொடங்கும் போதே நான் அக்கட்சியில் சேரவில்லை. விஜய் கட்சியில் ஏன் சேரப்போகிறேன்? நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என ரோஜா தெரிவித்தார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொடியில் “யானை” பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என். ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகை வடிவமைக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகம் நிறுவனர் விஜய் கொடியை அறிமுகம் செய்த ஒரு சில மணித்துளிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், “1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.

இதனால் அக்கட்சித் தலைமையை தொடர்பு கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் மத்திய தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டது. அதனடிப்படையில் தவெக நிர்வாகி வெங்கட் என்பவரை தொடர்பு கொண்டோம். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்ட ஆவணங்களையும் மத்திய தலைமையின் அறிவுறுத்தல்படி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கின்றனர். அது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்,” என பி.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,” என பி.ஆனந்தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பெற்றோர் முன்னிலையில் அறிமுகம் செய்த விஜய்..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என். ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த 19-ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகை வடிவமைக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.