கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவர் வயாலி காவல் நிலையத்தில், கழிவு மேலாண்மை டெண்டர் கொடுக்க ரூ.30 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பாஜக எம்எல்ஏ முனிரத்னம் உட்பட நான்கு நபர்கள் மீது மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். இதில், முனிரத்னம், அவரது உதவியாளர் VG குமார், அவரது பாதுகாப்பு அதிகாரி அபிஷேக் மற்றும் ஒரு வசந்த குமார் சாதிய துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
முனிரத்னம் தன்னை சாதி பெயரை கூறி அவமதிப்பு செய்துள்ளதாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வேலுநாயக்கரும் வயாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு புகார்கள் அடிப்படையில் காவல்துறை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் முனிரத்னம் எம்எல்ஏ ஆந்திரா மாநிலத்திற்கு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்த பெங்களூரு காவல்துறை அவரை கோலார் மாவட்டம், நங்கிலி என்ற பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.