அண்ணாமலை கேள்வி: விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா..!?

எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை வளர்ச்சி அடைந்து வருவதால், ஆயிரம் ஏக்கரை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை எப்படி நடத்த முடியும்.

சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் என்ற நிலை உருவாகும். எனவே, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழகத்தில் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்கிறது. 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், விமான நிலையம் அமைவதற்காக இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூரும், மாமண்டூரும் இடம்பெற்றிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாமண்டூரை நீக்கிவிட்டு பரந்தூர், பண்ணூரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதில் மத்திய அரசு பல ஆய்வுகள் நடத்திய பிறகுதான், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து பரந்தூரை தேர்வு செய்தது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளும் அனுப்பிய பட்டியலில் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. இடத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு கிடையாது. சென்னை அருகில் விமான நிலையம் வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அதை எங்கு கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது.

சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்கிறாரா விஜய், விமான நிலையம் வேண்டும் என்றால், எந்த இடத்தை தேர்வு செய்து அவர் கொடுப்பார், ஏனென்றால், பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும். டங்ஸ்டன் பிரச்சினை வேறு, விமான நிலைய பிரச்சினை வேறு. எனவே, பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வருவார்கள்.

எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா? தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சி தொடங்கி ஒராண்டாகிறது. இந்த ஓராண்டாக பரந்தூர் பக்கம் விஜய் ஏன் செல்லவில்லை. இவ்வளவு நாட்கள் என்ன செய்தார், விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா, டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை ஜனவரி 22-ஆம் தேதி சந்தித்து அதற்கு நிரந்தர தீர்வை கொடுக்க இருக்கிறோம். யுஜிசி வரைவு வழிகாட்டு முறைகளை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.

விஜய் வலியுறுத்தல்: பெண்கள் மீதான வன்முறைகள் தடுக்க ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்…!

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக தவைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லேடி வெலிங்டன் பள்ளியில் திமுக – தவெகவினர் இடையே திடீர் மோதல்..!

லேடி வெலிங்டன் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான முகாமில் மேஜை போடுவது தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மாவட்ட வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதவிர 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 09.11.2023, 10.11.2024, 23.11.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது.

கடைசி நாளான இன்று மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி சென்னை அயோத்தி குப்பத்திலுள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த சிறப்பு முகாமை தொடர்ந்து பள்ளியின் எதிரே தவெகவினர் கட்சி கொடியுடன் அமைத்து இருந்த மேஜைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது. இதுபற்றி தகவல் அறிந்த மெரினா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அயோத்தி குப்பம் லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான்: த.வெ.க கூட்டணி..! நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..!

நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும். நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை என சீமான் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு விமர்சனம்: சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர்னு சொல்லிட்டு வந்துடுங்க..!

“இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்..!

தஞ்சை ஒரத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் விஜய் ரசிகர்கள் நாம் தமிழரில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

கே.பி. முனுசாமி: தவெக தலைவர் விஜய் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான தாக்குதல் என்பது கையாலாகாத செயலாகும். மலையை பார்த்து மோதும் சிறு துரும்புகள். காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது. உழைக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் உயர்வான இடத்துக்கு வரக்கூடிய சான்றுதான் அதிமுக.

இதற்கு உதாரணம் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி. ஒவ்வொரு துறைகளிலும் அரசு செயல்படவில்லை. இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குகின்றனர். மக்கள் திசை திரும்பாமல் செல்ல, தவறான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தாலும், கட்சியின் கவுரவத்தை நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்துக்கு எடுத்து களங்கம் ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்படிப்பட்டவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக ஒருங்கிணையும் என்று அவர் சொல்வதாக குறித்த கேள்வி தேவையற்றது. இது முடிந்துபோன விஷயம். நடிகர் விஜய் கட்சியை தொடங்கி உள்ளார். அவர் தலைமையில், தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்று தெரிவித்துள்ளார். இத்தனை கொள்கைகளை பிரகடனப்படுத்தி உள்ளார். காலங்கள் மாறும்.

ஒரு நேரத்தில் ஒருவருக்கு ஒரு சிந்தனை ஏற்படும். நடைமுறையில் செல்லும்போது, அந்த சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும். அடுத்த சிந்தனை ஏற்படும். அப்படி வரும்போது அவருக்கு மனமாற்றம் ஏற்படும். அந்த மனமாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் தவெகவில் இணைந்தனர்..!

நாகப்பட்டினம் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். நாகப்பட்டினத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு தமிழக வெற்றிக் கழக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாகப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த திமுக-வை சேர்ந்தவர்கள் பலரும் அக்கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

திருமாவளவன் கேள்வி: விஜய் ‘ஆர்கானிக்னா..!? , விசிக என்ன இன்-ஆர்கானிக்கா ..?!

“விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா?” என தொல் திருமாவளவன் வேதியியல் முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் தொல். திருமாவளவன் பேசுகையில், “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது.

அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி… 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: தவெக தலைவர் விஜய் முதலில் யோசிக்க வேண்டும்..!

தவெக தலைவர் விஜய் உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.