Supreme Court: சிறுவர்கள் ஆபாச படத்தை பார்த்தாலும், சேமித்து வைத்தாலும் இனி போக்சோ பாயும்…!

சென்னையை சேர்ந்த வாலிபர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், சிறுவர்களின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும் ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது. சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான். குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று நீதிபதிகள் அளித்தனர்.

பயிற்சி மருத்துவர்கள் திட்டவட்டம்: “கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்..!”

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது மருத்துவர்களின் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அதுவரை அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் தொடர்ந்து பணியை புறக்கணித்து வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சேவை செய்ய விரும்பும் சமூகத்தின் கவலைகளை அவர்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கு தனித்தனி ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலனை செய்வோம். இல்லையெனில், முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் விரும்பவில்லை என்றே நாங்கள் புரிந்துகொள்வோம். அப்படியானால், மாநிலம் முழுவதும் ஏற்படும் சூழ்நிலைக்கு நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பாக்குவோம்.

மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும், கொல்கத்தா காவல்துறைத் தலைவரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிசிடிவி கேமராகூட நிறுவப்படவில்லை. ஓய்வெடுக்கும் அறை இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கனிமவள வரியை மாநிலங்கள் வசூலித்து கொள்ளலாம்..!

கனிமங்கள், சுரங்கங்கள் மீது ஒன்றிய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டி வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 25-ல் தீர்ப்பளித்தது. தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் இந்த தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் தீர்ப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம், “கனிம வளங்களுக்கு வரி விதிக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகளுக்கே அனுமதி உள்ளது என்ற தீர்ப்பை 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி முன் தேதியிட்டு அமலாகும். 2005 ஏப்ரல் மாதத்தில் இருந்து கனிமவள வரியை மாநிலங்கள் முன் தேதியிட்டு வசூலிக்கலாம். 2005 முதல் வசூலான கனிமவள வரியை ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம். 2024 ஜூலை 25-ஆம் தேதிக்கு முன்புள்ள காலத்துக்கான கனிம வள வரி நிலுவைத் தொகைக்கு வட்டி, அபராதம் விதிக்கக் கூடாது, என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்: “15 மாதங்களாக சிறை..! மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும்”

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து உடனே தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என நீதிபதி ஓகா தெரிவித்தார்.

ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு, “கடந்த ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வழக்கில் விசாரணை முடியும் வரை ஒருவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது.

ஜாமின் கோரிய வழக்கில், அதுபற்றி பேசாமல் வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசுவது சரியல்ல. வழக்கில் கைப்பற்றியதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு பொருந்தும். செந்தில் பாலாஜி 5 முறை சட்டமன்ற உறுப்பினர், அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார்; எனவே ஜாமின் வழங்க வேண்டும்,”என வாதிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போதுதான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்..! ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார்.

இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே போன்று, மற்றொரு மனுவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்.

மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரின் வாதத்தில், ‘ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களை சட்டப் பேரவையில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதுகுறித்து தமிழக அரசுக்கோ, சட்ட மன்றத்துக்கோ அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் இதுபோன்று செயல்படுகிறார். தமிழக ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்தனர். இதன் போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி, ‘அரசியல் சாசனத்தின் 200-வது விதிகளின் படி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஜனாதிபதிக்கோ, திருப்பி அனுப்பவோ அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியது தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இல்லையா?’ என்றார். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முதலில் சட்டமன்ற மசோதாக்களை மறு பரிசீலனை செய்ய திரும்ப அனுப்பினார். ஆனால் சட்டமன்றம் அவரது ஆலோசனையை ஏற்கவில்லை, எனவே தற்போது மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

அப்போது மீண்டும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, ‘மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். முதல் முறையே குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கலாம். கிடப்பில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டு, சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், ஆளுநர் தரப்பு குழப்பத்தில் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் சாசன பதவியில் இருப்பவரை கையாளுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிலும் சட்ட நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாகும். அதனால் தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையிலான பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆளுநரிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலழிக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரமில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறீர்கள். ஆளுநர் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்பு சட்டப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நாமினி தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்கள் முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசுக்கு TTV தினகரன் கண்டனம்

TTV தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தி துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இப்படி ஓர் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.தினகரன் என தெரிவித்துள்ளார்

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: பெண் விண்ணப்பதாரர்களை என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் ஒன்று என்.டி.ஏ எனப்படும் தேசிய ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆகும். பெண்களுக்கு அவர்களுடைய வயதுக்கேற்ற மருத்துவ அளவுகோள், வழங்கப்பட வேண்டிய பயிற்சி முறைகள், எத்தனை பேரை எடுக்கலாம் என்கிற எண்ணிக்கை, அவர்கள் தங்குவதற்கான இடவசதிகள், தனி கழிவறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இல்லாத காரணத்தால் என்.டி.ஏ எனப்படும் ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இதுவரை பெண்கள் எழுத அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை நீக்க முடியாது என்றும் கூறியுள்ளது.