ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை இனி எந்த காலத்திலும் மீண்டும் கொண்டு வர முடியாது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மறுநாள் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. சட்டமன்றத்துடன் கூறிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்தது.
பாஜக MLA களின் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அதன் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த தீர்மானத்தின் மூலம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரவாதத்தை ஆதரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என தெரிவித்தார்.
மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் என தெரிவித்துள்ளார். இதனிடையே மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூர்க்கா சமூகத்தினர், ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என ஸ்மிருதி இராணி வலியுறுத்தி உள்ளனர்.