76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என். ரவி மூவர்ணக் கொடியை ஏற்றினார்..!

நாட்டின் 76-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காலை 8 மணியளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த விழாவில், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மூவர்ணக்கொடியை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றிய போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி, முப்படையினர் உள்பட நாட்டின் பாதுகாப்புப் படையினரின் அணி வணக்க மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசைப் பிரிவினர், கடலோர காவல்படை, ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் பெண் படை, தமிழ்நாடு ஆயுதப் படையினரின் பேரிடர் மீட்புப் படை, ஆந்திரப் பிரதேச ஆண்கள் சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோர காவல் பாதுகாப்புப் படை, குதிரைப் படை, வனத்துறை பிரிவினர், சிறைத்துறை பிரிவினர், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவினர், ஊர்க்காவல் ஆண்கள் படைப் பிரிவினர், பள்ளி மாணவர்களின் கூட்டுக்குழல் இசை அணிவகுப்பு உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுத்து வந்து ஆளுநருக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, பல்வேறு சாதனைகளை புரிந்தோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் வேளாண் உழவர் துறை சிறப்பு விருது முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தி அடிகற காவலர் பதக்கம் சின்னக்காமணனுக்கு வழங்கப்பட்டது. அனைவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு துறைகளின் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது. பின் நாட்டுப் பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

ஆளுநர் அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என திமுக எம்.பி வில்சன் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்பாடு அருகே உள்ள மேல அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்ட சம்பவம் இன்று பேசுபொருளாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு வருகிறது.

அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை வாசிக்காமல் சில நிமிடங்களிலேயே வெளியேறினார். இதன்பின் ஆளுநர் மாளிகை தரப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமையாகும். இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி சபைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது.

ஆளுநர் அரசியலமைப்பு சட்டக் கடமையை அவைக்கு நினைவூட்டியதோடு, பேரவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை தேசிய கீதம் பாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல், சட்டப்பேரவையின் கடைசி நாளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில், முதலமைச்சருக்கு ஆணவம் நல்லதல்ல. அடிப்படைக் கடமைகளை செய்ய சொல்வது சிறுபிள்ளைத்தனமானது, அபத்தமானது என்று முதலமைச்சர் கூறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காட்டமான விமர்சனம் அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்து இருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார்.

ஆளுநர் மாளிகை விமர்சனம் ” தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த காட்டமான விமர்சனத்துக்கு ஆளுநர் மாளிகை நேற்று பதில் அளித்தது. ராஜ் பவன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை செய்ய சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கிறார். இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்.” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் இந்தப் பதிவுக்கு திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. திமுக ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திமுக எம்.பி பி.வில்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் தொடர்ந்து எதிர்முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.கவுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபடுவதும் அரசியல் சாசன பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது.

ராஜினாமா பண்ணிட்டு வாங்க அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு கண்களைப் போன்றவை – இரண்டும் சம அளவில் முக்கியமானவை. ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மற்றொருவரை காயப்படுத்துவதில்லை. அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது ஆளுநர் ரவி அவர்களே… அரசியலமைப்பை பற்றி பேச தகுதி இல்லை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பு கண்ணியத்தை நீங்கள் அவமதித்திருக்கும் போது, அந்த அரசியலமைப்பைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் கூட உங்களுக்கு குட்டு வைத்து உங்கள் வேலையைச் சரியாகச் செய்யச் சொல்ல வேண்டியுள்ளது! மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ராஜ் பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதைக் கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன். அவர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் என்பதையும், தமிழ்நாடு அரசையோ அதன் கொள்கைகளையோ விமர்சிப்பது, நடத்தை விதிகளின்படி ஒரு அரசுப் பணியாளரை பணி நீக்கம் செய்வதற்கு போதுமான காரணம் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.” எனத் தெரிவித்து உள்ளார்.

கிண்டி ராஜ்பவன்: தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பு

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். ஏறக்குறைய 4 ஆண்டுகள் பணியாற்றிய பன்வாரிலால் புரோகித், திடீரென பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.