140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடி உள்ளது. நேற்றைய முன்தினம் “ஒருபோதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் தற்போது மக்கள் முன் மிக மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது” என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.
நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதில்,“உண்மையே கடவுள்” என்று மகாத்மா காந்தி சொல்வார். உபநிடதத்தில் எழுதப்பட்ட “சத்யமேவ ஜெயதே” என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த பொன்மொழிகள் இந்திய சுதந்திர இயக்கம், இந்தியாவின் மறுசீரமைப்பு மற்றும் பொது வாழ்க்கையின் இலட்சியங்களாக மாறியது. உண்மையே பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் நாட்டில், உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பவர் அசத்தியத்தை நாடக்கூடாது.
இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராக பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அடுத்த தேர்தலுக்காக காத்திருக்காமல் ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம் என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாள்தோறும் உத்தரவாதங்கள் மூலம் பொதுப் பணம் மக்களின் பாக்கெட்டுகளில் போடப்படுகிறது.
நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொண்டுள்ளார். சமீபத்தில், ‘100 நாள் திட்டம்’, ‘2047க்கான சாலை வரைபடத்திற்கு, 20 லட்சம் பேரின் கருத்துகளை எடுத்து’, ‘ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்பு’, ‘100 ஸ்மார்ட் சிட்டி’, ‘கறுப்புப் பணத்தை மீட்பது’, ‘பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்தல்’ , ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’, ‘டாலருக்கு இணையாக ரூபாயை கொண்டு வருவோம்’, ‘நல்ல நாட்களை கொண்டு வருவோம்’… இப்படிப்பட்ட வாக்குறுதிகள் பொய் என நிரூபிக்கப்பட்டு, தற்போது நாட்டு மக்களுக்கு இதுபோன்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. .
140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார். காங்கிரஸைப் பற்றி கவலைப்படாமல், உண்மையைக் கடைப்பிடித்து தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் பணியாற்ற வேண்டும்.