மனோ தங்கராஜ்: “நிர்மலா சீதாராமன் கணவனின் கேள்விகளுக்காவது பதில் அளிப்பாரா..!?”

“மத்திய நிதி அமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், சென்ற வருடம் The Crooked Timber of New India என்ற நூலை வெளியிட்டு பாஜக 9 ஆண்டுகளில் எப்படி நாட்டை நாசகுப்பையாக்கியது என்பதற்கு துறைவாரியாக புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு பாஜகவின் போலி தேசப்பற்றை தோலுரித்தார். இன்று வரை அந்த தரவுகளுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ எந்த மறுப்பும் பாஜகவிடம் இருந்து வெளிவரவில்லை.

தற்போது, அவர் பல நேர்காணல்களில் “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் என்பதே இருக்காது” என்று கடுமையாக எச்சரித்து வருகிறார். இதற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளிக்காமல் இருப்பது, தனது கணவருக்கு ஏன் பதிலளிக்கவேண்டும் என்ற இறுமாப்பு காரணமெனில், குறைந்தபட்சம் ஒரு இந்திய குடிமகன், ஒரு பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையிலாவது பதில் அளிக்கலாமே! ஏன் வாய்திறக்கவில்லை?”

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. மேலும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட்களுக்கு நல்லது செய்வதாக கூறி, சாதாரண மக்களையும் பாஜக அரசு தண்டித்து வருகிறது.

“அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்ச கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக மக்களை பலி கடாவாக மாற்றி, பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கான விலையை ஏற்றியுள்ளது பாஜக அரசு. இந்த மக்கள் விரோத அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பாஜகவின் வண்டவாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பாஜக அரசு அமைந்த பிறகு பொருளாதார ரீதியாக நாடு எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை புத்தக வாயிலாகவும் உலகறிய செய்துள்ளார். இந்நிலையில், இதனை குறிப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் கணவர்: ”மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும்”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரகலா பிரபாகர் கொடுத்த பேட்டியில் , ” பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவின் வரைபடத்தையே இவர்கள் மாற்றி விடுவார்கள். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும். மேலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.