வானதி சீனிவாசன்: யாரு பாசிசம்..! யாரு கருத்து சுதந்திரம் என சிந்தித்து பாருங்கள்..!

யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி பாஜக MLA வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, வானதி சீனிவாசன் ஆவேசமாக பேட்டியளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் தவெக தலைவர் விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டி உடனே மறைந்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நானும் இந்த வீடியோவை பார்த்தேன்.. நிறைய பேர் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டுருந்தாங்க.. இதுக்கு நான் என்ன சொல்ல முடியும்.. ரொம்ப டிரெண்ட் ஆக இன்ஸ்டா, எக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்க எந்த அளவுக்கு இதனை அனுமதிக்கிறோம் என்று பாருங்கள். கருத்து சுதந்திரத்தை பாஜக அனுமதிக்கிறது.

இன்னொருவர் வந்து புகைப்படத்தை பின்னாடி வந்து காட்டும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தை நாங்க அனுமதிக்கிறோம். ட்ரோல், மீம்ஸ், காமெடி என எந்த மெசேஜ் ஆக வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இதே மாதிரி இன்னொரு கட்சியில், இந்த விஷயத்தை இந்த பக்கம் நின்று பண்ண முடியுமா?.. என்று பாருங்கள். அப்போ யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக MLA விடம் எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்து தர முடியுமா..!?

பாஜக MLA ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பாஜகவினர், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சர்க்காரி தொகுதி MLA வாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத்.

இவர் தன்னுடைய காரில் ஹோபா சாலையில் சென்றபோது, அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தார். பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்தி, அங்கிருந்த ஊழியரிடம் தன்னுடைய பெட்ரோலை நிரப்ப சொன்னார். உடனே அங்கிருந்த ஊழியர் அகிலேந்திர கரே என்பவரும், MLAவின் காருக்கு பெட்ரோல் நிரப்பினார்.

பிறகு, காருக்குள் உட்கார்ந்திருந்த MLAவிடம் சென்ற ஊழியர், எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்து தர முடியுமா? என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை கண்டு திடுக்கிட்ட பாஜக MLA, அந்த ஊழியரிடம் இதுகுறித்து விசாரித்தார்.

இது தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த சர்க்காரியில் தொகுதியில்தான் நான் வசித்து வருகிறேன். என் பெயர் அகிலேந்திர கரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. எனக்கு பெண் பார்க்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். MLA பிரிஜ்பூஷன் ராஜ்புத் உனக்கு இப்போ என்ன வயசாகுது? என கேள்வி கேட்க “44 வயசு சார்” என ஊழியர் பதிலளிக்கிறார்.

“உனக்கு ஒரு பொண்ணு தேடுவதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்?” என்றும் பாஜக MLA சிரித்துக்கொண்டே இதுக்கு முன்பு எங்காவது சென்று பெண் கேட்டாயா? சரி, உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.. உனக்காக பெண்ணையும் தேடுகிறேன்.. அதுவும் நீ எனக்கு வாக்களித்ததால் இதை செய்கிறேன்.. பெண் வீட்டார் கேட்டால், உன்னுடைய வருமானம் எவ்வளவு என்று சொல்லட்டும்?என கேள்வி கேட்க அதற்கு “6 ஆயிரம் ரூபாய் என ஊழியர் பதிலளிக்கிறார். பாஜக MLA “சரி, நான் நிச்சயம் திருமணத்துக்கு உதவுகிறேன்” என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை..! மாமூல் கேட்டு வியாபாரியை ரவுடிகள் தாக்குதல்..!

மாமூல் கேட்டு ரவுடிகள் தாக்குதல் நடத்தியதால் வியாபாரி காயமடைந்த நிலையில், வியாபாரிக்கு சிகிச்சை தராமல் அலைக்கழிக்கப்பட்டதால், சுயேச்சை MLA தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். சந்திரன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்த சோடா பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சந்திரன் கூச்சல் போட்டதால் ரவுடிகள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, கை, தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சந்திரனுக்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி இன்று காலை அவர் சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.ஆனால் அங்கிருந்தவர்கள், தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லை என்று சொல்லி அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சந்திரன் மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மாமூல் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சுயேச்சை MLA-வான நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். அப்போது வியாபாரி சந்திரன் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, சந்திரனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

இதையடுத்து, காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குநர், அதிகாரிகள் அங்கு வரவேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரி சந்திரனை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக் கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டப்பேரவையைக் கடந்து, ஆளுநர் மாளிகை முன்பு வந்தனர். அங்கு ஸ்ட்ரெக்சரை நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தப் பகுதியில் கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களை ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் MLA ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி சரியாக செயல்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் நாராயணசாமியிடம் தெரிவிக்க, இங்கு அரசியல் வேண்டாம் என அவர் பதில் தர தொடர்ந்து இருத்தரப்பும் பேசியபடி இருந்தனர். அரசுச் செயலரோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் இருந்தவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது. பின்னர் சுகாதார துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேல் அங்கு வந்து அவர்களுடன் பேசினார்.

இதையடுத்து, காவல்துறை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை கொண்டு வந்தனர். அதில் வியாபாரி சந்திரனை சிகிச்சைக்காக ஏற்றினர். ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால், “வியாபாரி என்றால் அலட்சியமா அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா?” எனக்கூறி, “மருத்துவர் வந்தால்தான் ஆம்புலன்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வியாபாரி சந்திரனை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிமுக MLA, பாஜக நிர்வாகி நில மோசடி செய்ததாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி கதறிய பெண்..!

அதிமுக MLA மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் இணைந்து தங்களது நிலங்களை மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான 30 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அப்போது, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இப்பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.

அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய வாரிசுதாரர்கள், காளிக்கோனார் என்பவருக்குச் சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் கீரணத்தத்தில் உள்ளது. இந்த நிலத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருகின்றனர்.

உடனடியாக அவர்கள் மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், நிலம் குறித்து பேசினால் தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் ரூ.30 லட்சம் கமிஷன் கேட்ட பாஜக எம்எல்ஏ கைது..!

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவர் வயாலி காவல் நிலையத்தில், கழிவு மேலாண்மை டெண்டர் கொடுக்க ரூ.30 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பாஜக எம்எல்ஏ முனிரத்னம் உட்பட நான்கு நபர்கள் மீது மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். இதில், முனிரத்னம், அவரது உதவியாளர் VG குமார், அவரது பாதுகாப்பு அதிகாரி அபிஷேக் மற்றும் ஒரு வசந்த குமார் சாதிய துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

முனிரத்னம் தன்னை சாதி பெயரை கூறி அவமதிப்பு செய்துள்ளதாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வேலுநாயக்கரும் வயாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு புகார்கள் அடிப்படையில் காவல்துறை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் முனிரத்னம் எம்எல்ஏ ஆந்திரா மாநிலத்திற்கு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்த பெங்களூரு காவல்துறை அவரை கோலார் மாவட்டம், நங்கிலி என்ற பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

எம்.எல்.ஏ ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்களை இடமாற்றம் செய்யக்கோரி மருத்துவமனை முற்றுகை

திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்ச மருத்துவ சேவையும் கிடைப்பதில்லை. உள்ளூரைச் சேர்ந்தவர் மருத்துவ அலுவலராக இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. அவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநரிடம் எஸ்.சந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது புகார் செய்து, அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை பரபரப்பு ஏற்பட்டது.