இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.
நரேந்திர மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்க்கு நரேந்திர மோடி வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. பாஜகவும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம். நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகி இடமிருந்து வருகின்றது.
பிரதமர் நரேந்திர மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.