L. முருகன் வேண்டுகோள்: சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்..!

குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார் .

டிஆர் பாலு ஆவேசம்: நேற்று வந்த அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா…. !?

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது, வெள்ள நிவாரணம் தொடர்பாக திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் முருகனை, டி.ஆர்.பாலு கடுமையாக சாடினார். அமைச்சராக இருக்கவே எல் முருகன் தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ” மிகவும் வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறைச் சார்ந்த ஒரு கேள்விக்கு பதில் தருகிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், எம்பியுமான டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து அன்ஃபிட் என்று கூறுகிறார். அதாவது தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார். ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இப்படி கூறியிருக்கிறார்.

உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தனர். பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலு சொல்வாரா? கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா?

எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசி உள்ளீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசி உள்ளீர்கள்” என்று கட்டமாக அண்ணாமலை கூறினார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் டிஆர் பாலு செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒரு அமைச்சராக இருந்து கொண்டிருப்பவரிடம் எந்த கேள்வி கேட்டோமோ அந்த கேள்விக்கு அந்த அமைச்சர் பேசலாம்.. அவருடைய துணை அமைச்சர் பதில் சொல்லலாம்.. இவர் எதற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார். மீன்வளத்துறை அமைச்சர் இந்த கேள்விக்கு ஏன் பதில் பேசுகிறார்..

அதற்கு உள்நோக்கம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல.. எனக்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது.. எல்லா ஜாதியும் எல்லா மதமும் ஒன்று தான்.. அவர் வந்து அரசியல் ரீதியாக பேச ஆரம்பித்தால் அதற்கு எல்லாம் பதில் பேச முடியாது.. ஒரு கேள்வியில் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியாக பேசினால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது… 60 வருசமாக அரசியலில் இருக்கிறேன்.

நேற்று வந்த அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போய்விட்டேனா.. என் பேச்சை முற்றிலும் தவறாக திரித்து பேசுகிறார்கள் . தமிழ்நாடு சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறார் ஆ ராசா, அவர் தலித். அவர் கேள்வியின் போது துணை கேள்வி நான் எழுப்புகிறேன்… அப்போது குறுக்கிடுகிறார்.. குறுக்கீடு செய்ய என்ன அருகதை இருக்கிறது… அவர் அந்த துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும்.

உள்துறையின் துணை அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கேள்வியை அவரே கேட்டு பதில் சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை.. எதுவே இல்லாமல், சம்பந்தம் இல்லாமல் தலித் தலித் என்றால் என்ன… நாங்கள் என்ன தலித் விரோதிகளா.. நான் சாதி ரீதியாக யாரையும் தாழ்வு படுத்தவே மாட்டேன்.” என்ன டிஆர் பாலு கூறினார்.