செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!? என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் H. ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, “செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.