H. ராஜா திமுகவை பின்தொடர்ந்து பேசினால் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்..!?

ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விக்கு ஹெச். ராஜா பதிலளித்தார்.

அப்போது, “ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.

திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தை பேசும் விஜய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் கேள்வி: முதலமைச்சர் ஒப்புதல் அளித்தது ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்..!

ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” முன்கூட்டியே விடுவிக்கக் கோரி கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சித்தராமையா குற்றச்சாட்டு: ஆளுநர் மூலம் அரசுக்கு பாஜக தொந்தரவு…!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, இந்த நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதியளித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், எனது 40 ஆண்டு அரசியல் வாழ்வில் இதுவரை எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபட்டதில்லை. எனது பதவியை வைத்து எந்த ஊழலும் செய்ததில்லை. ஆனால் பாஜகவும், மஜதவும் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மேலும், எனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதும் ஆளுநர் என் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் பாஜக மேலிடத்தின் அழுத்தம் இருக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என் மீது எந்த தவறும் இல்லாததால் நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனது பதவிக்காலம் முழுவதும் நானே முதலமைச்சராக தொடர்வேன். என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஆர்.என்.ரவி: நாட்டை துண்டா விரும்புகிற திராவிட சித்தாந்தம்..!

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நாடு விடுதலையின் போது 77 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிவினை கால கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் போது துன்பகரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மனிதர்களின் தவறுகளால் இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஒன்றரை கோடி அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். எத்தனையோ லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பது அனைவரும் சமம்தான் என்கிறது. ஆனால் இந்த நாட்டை 65 ஆண்டுகளாக ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைத்தனர்; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். உலகில் வலிமை மிக்க ராணுவமாக நாம் திகழ்கிறோம். நமது நாட்டிடம் ஆயுதங்களை பிற நாடுகள் வாங்குகின்றன. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் சிலர் நமது நாட்டு பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

1947-ல் ஏற்பட்ட பிரிவினையின் வடுக்கள் ஆறவில்லை. இந்த துயரம் இப்போதும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் ஒன்றுதான் திராவிட சித்தாந்தம். இந்தியாவை துண்டாட விரும்புகிற சித்தாந்தம் திராவிடம். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க மறுப்பதுதான் திராவிட சித்தாந்தம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட காரணமே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததுதான். பள்ளிகள், கோவில்களில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் கவலை தருகின்றன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

“ஆளுநர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் புறக்கணிப்பார்கள்..!”

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. மேடையில் பேசுகையில், “இந்த பயணம் என்பது பல விஷயங்களை சொல்லி கொடுக்க கூடிய ஒன்று, ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்கு செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர்தான் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது.

இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையை தரும். எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள்” என கனிமொழி பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் சந்தித்த கனிமொழி பேசுகையில், “கடந்த 2008 -ஆம் ஆண்டு, முதன்முதலாக தலைவர் கலைஞர்தான் திருநங்கைகளின் எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு. சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள், திருநங்கைகள் மேலே படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான படிப்பு மற்றும் ஹாஸ்டல் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து உள்ளார்.

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என கனிமொழி பேசினார்.

ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்..! ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார்.

இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே போன்று, மற்றொரு மனுவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்.

மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரின் வாதத்தில், ‘ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களை சட்டப் பேரவையில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதுகுறித்து தமிழக அரசுக்கோ, சட்ட மன்றத்துக்கோ அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் இதுபோன்று செயல்படுகிறார். தமிழக ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்தனர். இதன் போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி, ‘அரசியல் சாசனத்தின் 200-வது விதிகளின் படி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஜனாதிபதிக்கோ, திருப்பி அனுப்பவோ அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியது தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இல்லையா?’ என்றார். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முதலில் சட்டமன்ற மசோதாக்களை மறு பரிசீலனை செய்ய திரும்ப அனுப்பினார். ஆனால் சட்டமன்றம் அவரது ஆலோசனையை ஏற்கவில்லை, எனவே தற்போது மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

அப்போது மீண்டும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, ‘மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். முதல் முறையே குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கலாம். கிடப்பில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டு, சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், ஆளுநர் தரப்பு குழப்பத்தில் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் சாசன பதவியில் இருப்பவரை கையாளுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிலும் சட்ட நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாகும். அதனால் தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையிலான பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆளுநரிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலழிக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரமில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறீர்கள். ஆளுநர் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்பு சட்டப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நாமினி தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்கள் முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

கிண்டி ராஜ்பவன்: தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பு

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். ஏறக்குறைய 4 ஆண்டுகள் பணியாற்றிய பன்வாரிலால் புரோகித், திடீரென பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.