தமிழிசை சௌந்திரராஜன்: முதலமைச்சரின் மாற்றம்..! துரைமுருகன் ஏமாற்றம்..! உதயநிதிக்கு ஏற்றம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரே கேள்வி தான்..! சட்டென எழுந்து போன துரைமுருகன்..!

ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் இன்று பேசு பொருளாகி உள்ளது.

கடந்த காலங்களில் சினிமாவில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் திடீரென தீவிர அரசியலில் இறங்கினார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அந்த தேர்தலில் திமுக கூட்டணி , தமிழகம் புதுவையில் 40க்கு 39 தொகுதிகளில் வென்ற உறுதுணையாக இருந்தார். இதைடுத்து உதயநிதி ஸ்டாலினிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால் 2021-ல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்று திமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சராகவில்லை. எனினும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு பணிகளில் பங்கேற்று வந்தார். அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள்.

இதன்பின்னர் உதயநிதியை அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நிர்வாகி பணி ஆகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வசம் இருந்த இந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உதயநிதி ஸ்டாலின் முடிவெடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபற்றி பலமுறை தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அத்தனை முறையும் இது வதந்தி என்றே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை இதுபற்றி மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை’ என கூறினார்.

இதனிடையே மு.க. ஸ்டாலின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப ஆகஸ்டு 19-ந் தேதி அன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அண்மையில் கூட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், வெளியிட்ட பதிவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகனை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதியை துணை முதலமைச்சராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அண்மை காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

அதேநேரம் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்த கேள்விகளுக்கு கட்சியின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் மறுத்தே வருகிறார். ராணிப்பேட்டை அருகே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சர் ஆவார் என்பது குறித்த கேள்விக்கு , துரைமுருகன் பதில் அளிக்ககாதது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி அன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை துரைமுருகனும் முன்மொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே திமுகவினர் இன்னும் ஒருவாரம் வரை அதற்கு காத்திருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பு.

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்காலம்..! அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும்..!

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தெரிவித்தார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். ஆனால் வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள்.வந்த உடன் இங்க என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது, இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்களின் புதிய சிந்தனை மற்றும் ஆற்றலை கட்சியில் இணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், கட்சியை இன்னும் வெற்றிகரமாக நடத்த முடியும் என துரைமுருகன் தெரிவித்தார்.