எடப்பாடி பழனிசாமி: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்..!

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள். திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ‌ குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட கட்சி திமுக. திமுகவில் அரசியலிலும் அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானார். திமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்த போதும் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். ஸ்டாலினுடன் மிசா சிறையில் சித்திரவதை அனுபவதித்த மூத்த நிர்வாகிகள் யாரும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளனர்.

திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது. திமுகவில் ஸ்டாலின் அரசராகவும், உதயநிதி இளவரசராகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

அதிமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டரை ஆண்டுகள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திமுக சொன்னது எல்லாம் அறிவிப்பு மட்டும்தான், மக்கள் நலனுக்கான திட்டங்கள் அல்ல. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை இல்லாத இடமே இல்லை. இதை தடுத்து நிறுத்தும் திராணி முதலமைச்சருக்கு இல்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை.

கஞ்சாவை கட்டுப்படுத்த ஓ.1, ஓ.2, ஓ.3 என முன்னாள் டிஜிபி ஓ…. போட்டு கொண்டே சென்று விட்டார். நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் வீட்டு மக்களை மட்டுமே நினைக்கிறார் முதலமைச்சர். அதிமுக மூன்றாக போய்விட்டது நான்காக போய்விட்டது முதலமைச்சர் என்கிறார். நாங்கள் தான் அதிமுக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இதை நிரூபித்து காட்டியுள்ளோம். அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் ஓட்டு குறையும் என்றார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுகவை வீழ்த்த முடியாது. திமுக சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக, சொந்த கட்சியையும் உழைக்கும் நிர்வாகிகளையும் நம்பியே உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை என்கிற நிலைதான் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணி. 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பி, அதிமுக ஆட்சி அமைக்கின்ற தேர்தல். தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகள் தேனீக்களை போலவும், எறுப்புகளை போலவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நீங்க என்ன ரொம்ப உத்தமரா..!? நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன் சீமான்..!

தவெக முதல் மாநில மாநாடு முடிந்த பின்னர் பல அரசியல் இயக்கங்கள் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் காட்டமாகவே விமர்சித்தார். ஒரு கட்டத்தில், விஜய்யை கூமுட்டை எனவும் லாரி அடித்துச் செத்துப்போவாய் எனவும் சீமான் கூறியது அரசியல் நாகரீகத்தினை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் தெரிவித்தனர்.

விஜய்யுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டும் உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், விஜய்யை மோசமாக விமர்சித்த சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ” என்ன மிஸ்டர் சீமான், சாபமெல்லாம் விடுகின்றீர்கள்? விஜய் அண்ணனுக்கு ரோட்டின் இந்தப் பக்கம் இரு, அல்லது அந்தப் பக்கம் இரு, நடுவில் இருந்தால் லாரி அடித்துச் செத்துப்போவீர்கள் என சாபம் எல்லாம் விடுகின்றீர்கள்.

நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான். நான் உங்க ரூட்டுக்கே வரேன். அண்ணன் விஜய், திமுக என இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் கொள்கை ரீதியாகத்தானே தவறாக உள்ளதாக கூறுகின்றீர்கள்.கொள்கை ரீதியாக தவறு செய்பவர்களே லாரி அடித்துச் செத்துப்போவர்கள் என்றால், எங்களைப் போன்ற பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த நீங்க, எது அடித்துச் சாகமாட்டீர்கள் மிஸ்டர் சீமான். முதலில் உங்க கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்யுங்கள். திருச்சி சூர்யா உங்களின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு, உங்களின் மானத்தினை வாங்கப்போகின்றாராம். முதலில் அதைப்போய் கவனியுங்கள்.

திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்குத் தெரியும், விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. எனவே உத்தமர் போலவும், கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க. நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்: பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் திராவிட இயக்கம்தான் வளர்த்து வருகிறது..!

திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை என்ன எனக்கு..!?

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை என்ன எனக்கு இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நியூஸ்18 தொலைகாட்சி நடத்தும் களம்18 நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.

அப்போது, விசிக, திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். திமுக கூட்டணி என்பது மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் என்னுடைய தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை.

கூட்டணியில் இருந்தால் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி. திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொடுகிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்: விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா..!?

1993-இல் தமிழ் வெளிவந்த அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அஜித்குமார் அறிமுகமாகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து ‘அஜித் குமார் ரேசிங்’-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். அப்போது, “துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான்..!

எல்லா கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கு கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். தவெக சார்பில் மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அதிமுகவை விஜய் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை, கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, வருங்காலத்தில் அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை.

பாஜக, திமுகவை விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “விஜய் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். அந்தக் கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஒத்த கொள்கையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முதல்வரும் கூறுகிறார், அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சியா? அப்படியென்றால், அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாமே. தனித்தனி கட்சிகள் தேவையில்லையே.

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைக்கப்படும். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. மறுபடியும் கூறுகிறேன். கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். கொள்கை என்பது நிலையானது,” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

ஆளூர் ஷாநவாஸ் சரமாரியான விமர்சனம்: விஜய் பாஜக எதிர்ப்பில் எலி..! திமுக எதிர்ப்பில் புலி..!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக பாசிசம் என்றால் திமுக என்ன பாயாசமா? என்று பேசி இருந்த நிலையில், பாசிசம் என்றால் என்ன என்றே விஜய் புரியாமல் பேசுகிறார் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரித்துள்ளார்.

“நான் முன்பே விஜய் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் எடுத்துவிட்டால், அது அதிமுகவுக்குப் பிரச்சினையாகவே போய் நிற்கும் என்று சொல்லி இருந்தேன். இப்போது அதேநிலைப்பாட்டிற்குத்தான் விஜய் வந்து நிற்கிறார். பலரும் அப்போது என்னை விமர்சித்தார்கள். விஜய் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு எப்படி பாதிப்பு வரும் என்றார்கள். ஞாயிற்றுக் கிழமை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தெளிவாக திமுக எதிர்ப்பைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது.

இனிமேல் விஜய் திமுகவை விமர்சித்தே போராட்டங்களை நடத்துவார். இதை யார் செய்ய வேண்டும்? அதிமுக செய்யவேண்டும். அதை இப்போது விஜய் கையில் எடுத்திருக்கிறார். திமுகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளின் அரசியல். எனவே, விஜய் வருகை இந்தக் கட்சிகளுக்குத்தான் பின்னடைவைத் தரும். கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் தினம் எடப்பாடி பிரஸ் மீட் நடத்தி இருந்தால், கமலாலயம் பக்கம் ஊடகங்கள் போய் இருக்காது.

எடப்பாடி தவறவிட்ட இடத்தைத்தான் அண்ணாமலை பிடித்துக் கொண்டார். இதைப் புரிந்துகொண்டுதான் விஜய் தெளிவான முடிவுடன் வந்துள்ளார். திமுக சாடிய அவர், அதிமுகவை மறைமுகமாகக் கூட விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி, அந்தத் தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார். ஜெயலலிதா பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை. ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஊழலால் தண்டனைப் பெற்றவர்கள் உள்ள கட்சி அதிமுக. அதை ஏன் விமர்சிக்கவில்லை? திமுக குடும்பத்திலிருந்து யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை. யாரும் ஜெயில்லுக்குப் போகவில்லை.

2ஜி வழக்கில் கூட வாதாடி வெளியே வந்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஊழல் என்று சொல் நேரடியாக திமுக பக்கம் போகிறார். திமுகவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது விமர்சிக்கக் கூடாத கட்சியும் அல்ல. ஆனால், திமுகவைப் பாசிச சித்தாந்தம் உள்ள பாஜகவுடன் ஒப்பிட்டுப் பேசுவதே தவறான புரிதல். பாஜகவைக் காட்டி பூச்சாண்டி காட்டுவதாகச் சொல்கிறார்.

இங்கே சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்வது யார்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு எதிரானது? காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்தின் பின்னணி என்ன? முத்தலாக் தடைச் சட்டம் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது? ராமர் கோயில் கட்டப்பட்ட இடத்தில் முன்பு என்ன இருந்தது? ஹிஜாப் எதிர்த்து சட்டம் போடுவது எதற்காக? வக்ஃபு திருத்தச் சட்டம் யாரைப் பாதிக்கும் ? இடஒதுக்கீடு முஸ்லிம் மக்களுக்கு மாநில அரசு கொண்டு வந்தால் மத்திய அரசு அதைத் தடுக்கிறது? தேர்தலில் சீட்டே கிடையாது பாஜக என்கிறது.

அமைச்சரவையில் முஸ்லிம்களையே சேர்க்க மறுக்கிறார்கள்? முஸ்லிம்களிடம் ஓட்டே கேட்க மாட்டேன் என பாஜகவினர் பரப்புரை செய்தார்கள்? இதைத்தான் பாசிசம் என சொல்கிறோம். இப்படி எங்கேயாவது ஒரு தரப்புக்கு எதிராக, மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறதா? திமுகவை எதிர்க்கிறார்? ஆனால், திமுக கொள்கைகளை விஜய் ஏற்றுக் கொள்கிறார். இது ஏன்? பாஜகவை எதிர்த்தால் தமிழ்நாட்டில் விஜய்யின் வண்டி ஓடும். அதே மாதிரி திமுக கொள்கையை ஏற்றால்தான் வண்டி ஓடும். அதைத்தான் விஜய் செய்கிறார். ஆகவே, மதவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்கிறார். திமுக அரசியல் எதிரி என்கிறார். பாஜகவை எலி போல் எதிர்க்கிறார், திமுகவுக்குப் புலியாக எதிர்க்கிறார் விஜய் என ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.

மா.சுப்பிரமணியன் தரமான பதில்: “எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்து.. எங்களின் கவனம் சிதறாது..!”

எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்” என விஜய் பேசினார்.

விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு சிறு துரும்பைகூட எடுத்து போட்டு இருக்க முடியாது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

விஜய்: கொள்கை ரீதியாக பாஜக, அரசியல் ரீதியாக திமுக எங்கள் எதிரிகள்…!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என விஜய் பேசினார்.