நவ்யா ஹரிதாஸ்: நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டது..!

நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.

வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், வயநாடு தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதற்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் மீதான எதிர்ப்பு மனநிலை, உள்ளூர் அரசியல்வாதியாக நான் செய்து வரும் பணிகள், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணம் ஆகிய3 சாதகமான அம்சங்கள் உள்ளன.

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபோல பிரியங்கா காந்தி பரிச்சயமானவர் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை. நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியும் வயநாடு தொகுதி மக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களை ஏமாற்றி உள்ளனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரு குடும்பத்தினர் தங்களுக்கு உதவவில்லை என்பதை புரிந்துகொண்டனர் என நவ்யா ஹரிதாஸ் தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியா..!?

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணும் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜ் இருந்தது எப்படி..!?

ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த முரண்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஹரியானா தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உயர்மட்ட குழு நேரில் புகாரளிக்க அனுமதி கேட்டு இருந்த நிலையில், ஹரியானா முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பவன் கேரா, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதன் பின் பூபிந்தர் சிங் ஹூடா, பவன் கேரா உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது, பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்கு இயந்திரங்கள் 60 அல்லது 70 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருப்பது வழக்கம். நாள் முழுவதும் வாக்குப்பதிவு நடக்கும் போது சார்ஜ் குறையும்.

பின்னர் அவை சீலிடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவு நாளில் மட்டுமே வெளியில் கொண்டு வரப்படும். அப்படி இருக்கையில், ஹரியானாவில் சில மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருந்துள்ளன. இதுதொடர்பாக 7 தொகுதிகளில் இருந்து எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து 20 புகார்கள் வந்துள்ளன.

இதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளோம். கூடுதல் ஆதாரங்களை அடுத்த 48 மணி நேரத்தில் சமர்பிப்பதாக கூறி உள்ளோம். இந்த வெளிப்படையான முறைகேடு தேர்தல் முடிவையே மாற்றக் கூடியது. எனவே இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

வானதி சீனிவாசன் சாடல்: ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு..!

“ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது,” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல்காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் காந்தி குறித்த செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும். ஜம்மு – காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 25.64 சதவீதம் அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 வாக்குகளைப் பாஜக பெற்று, அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றி தொடரும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது .

தலித் சமுதாயத்தை சேர்ந்த அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி

தலித் சமுதாயத்தை சேர்ந்த அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பட்டியலினத்தவர் மற்றும் பிறப்படுத்தப்பட்டோருக்கு பங்களிப்பை வழங்கிய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோரின் இல்லத்திற்கு சென்று இருந்தார். பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவருடன் இணைந்து சமையல் வேலைகளில் உதவி செய்ததோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இது தொடர்பாக வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்றும் தலித் சமூக மக்கள் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். தலித் சமூக மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்டேன்.

அவரது வீட்டிற்கு என்னை மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ‘ஹர்ப்யாச்சி பாஜி’ என்ற கறியை தயாரித்தோம். பட்டியலினத்தவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணவு குறைவாக இருப்பதாகவும், அவர்களின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தபட வேண்டியதும், அவசியம் குறித்தும் கலந்துரையானேன். பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் சாசனம், பங்களிப்பையும் உரிமைகளையும் வழங்கி இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, அந்த அரசியல் சாசனத்தை தாங்கள் பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 1200-க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு தருவோம்…!

அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, வாகனப் பேரணியில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பஹதுர்கரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது, பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை மூடிவிட்டார் நரேந்திர மோடி. அவர் அதானி-அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார். இன்று 2-3 கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக அரசை நடத்துகிறது பாஜக என்பது நாடு முழுவதும் தெரியும். ஹரியாணாவில் இருந்து அதிகமானோர் ராணுவத்தில் சேருவார்கள். அக்னீவீர் திட்டத்தை அறிமுகம் செய்து அதனை மோடி முடக்கிவிட்டார்.

அக்னிவீர் என்பது ராணுவ வீரர்களின் தியாகி அந்தஸ்தையும், ஓய்வூதியத்தையும் திருடும் திட்டமாக உள்ளது. அனைவருக்கும் போதைப் பொருள் பிரச்சினை இருப்பது தெரியும். நான் மோடியிடம் ஒன்று கேட்கிறேன். அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 1200-க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு தருவோம். ஹரியாணா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் வழங்குவோம். இந்தியாவில் உள்ள தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசியலமைப்பு தருவது. இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சமம் என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், கோடீஸ்வரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி, பெண்கள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால், அது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி…! பிரதமர் நரேந்திர மோடியின் கடவுள் அதானி..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம். என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை. நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மட்டுமே வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். மோடி அரசு மக்கள் விரோத சட்டத்தை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் முன் நிற்பதால் யு டர்ன் எடுக்கிறார்கள். புதிய சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் முதன்மையான கோரிக்கை. நாம் வலுவாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் எதை செய்ய நினைக்கிறதோ அதுதான் நடக்கிறது என ராகுல்காந்தி தெரிவித்தார்.

Mallikarjuna Kharge: சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியார் அவருக்கு அஞ்சலி..!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்கத்தில், கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு குணங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும்- பெரியார் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது..!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே எக்ஸ் பக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.