கட்டிட அனுமதி பெற 40,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது..!

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி ராஜா நகர் பகுதியில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினி பாபு என்பவர் கட்டுமான பணி செய்து வந்துள்ளார். ரஜினி வீட்டின் கட்டிட வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சத்யராஜ் ரூ.46 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ரசாயனம் தடவிய ரூபாய் கொடுத்து அனுப்பினர். இதனை நேற்று குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜிடம் ரூ.46 ஆயிரம் ரஜினி பாபு கொடுத்துள்ளார். அப்போது ரூ.40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ரூ.40 ஆயிரத்தை மட்டும் அவரது கையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு சத்யராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஒப்பந்தக்காரர் சவுந்தர்ராஜன் என்பவரையும் காவல்துறை கைது செய்தனர்.

பட்டு கூடு நாற்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

நாமக்கல் மாவட்டம் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனராகவும், கரூர் மாவட்டம் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனராக முத்துபாண்டியன் என்பவர் கவனித்து வருகிறார். இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டிபுதூரைச் சோ்ந்த பட்டு வளா்ப்பு விவசாயி தேகதீஸ்வரன் என்பவரிடம் அரசின் மானியத் தொகை ரூ. 1 லட்சத்தை விடுவிக்க ரூ. ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தருமாறு உதவி இயக்குநா் முத்துபாண்டியன் கேட்டதாகத் தெரிய வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிவுறுத்தலின்பேரில் ராசிபுரம், பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தின்போது விவசாயி தேகதீஸ்வரன் ரூ. 20 ஆயிரம் பணத்தை உதவி இயக்குநா் முத்துபாண்டியனிடம் லஞ்சமாக அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி, ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான காவல்துறை பணத்தைப் பெற்ற உதவி இயக்குநா் முத்துபாண்டியனை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது – இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான்

மதுரையில் காவல் அதிகாரியாக பணியாற்றிய ஓ.பாஸ்கரன் என்பவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பின்னர், பாஸ்கரன் மீது துறை ரீதியான ஒழுங்கு விசாரணையை அதிகாரிகள் நீண்டகாலமாக மேற்கொள்ளவில்லை. அதையடுத்து பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, முக்கியத்துவம் இல்லாத பணியை அவருக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மதுரை காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்து உத்தரவில், பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்த பின்னர் துறை ரீதியான விசாரணையை மதுரை காவல் ஆணையர் மேற்கொள்ளவில்லை. அவரை விசாரணை மேற்கொள்ளவிடாமல் எது தடுத்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன.

பொது ஊழியரை பணியிடை நீக்கம் செய்துவிட்டு, அவருக்கு எதிரான துறை ரீதியான விசாரணையை பல ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு நீதிமன்றம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணி வழங்கத்தான் உத்தரவிடும். எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.

அதேநேரம், பாஸ்கரனுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்த வேண்டும். மேலும், இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது. இதுபோன்ற கேவலமான செயல் சம்பந்தப்பட்ட துறை மற்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. முன்பெல்லாம் கூடுதலாக பணி செய்வதற்காக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் கேட்கப்பட்டது.

ஆனால், இப்போது அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சம் புகுந்துவிட்டது. இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான். லஞ்சம் தன்னுடைய வேர்களைப் பரப்பி, சமுதாயத்தை கரையான் போல் அரித்து வருகிறது என தெரிவித்தனர்.

கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னழகன் என்ற விவசாயி தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், பட்டா மாறுதல் செய்வதற்கு சின்னழகனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேடடுள்ளார்.

ஆனால் சின்னழகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை எனவே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரம் நோட்டுகளை சின்னழகனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சின்னழகன், கோமனாம்பட்டியில் உள்ள கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று கையும் களவுமாக தங்கவேலை பிடித்து கைது செய்தனர்.