அமைச்சர் சேகர்பாபு: பாவம் செய்ததை போக்க அண்ணாமலை நடைபயணம்…!

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தங்கசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் பணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 40 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல்காந்தி நடை பயணம் செய்தது இந்தியாவை மீட்டெடுக்க.

அண்ணாமலை நடைபயணம் செய்வது அவரை முன்னிலைப்படுத்த தான். ஆட்சி மூலமும், கட்சி மூலமும் பல்வேறு நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப்படுகிறது. திமுக எந்த பாவமும் செய்யாததால் நடை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

முதலமைச்சர் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் தேடட்டும்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாதயாத்திரை துவக்க விழாவில் பேசிய அமித்ஷா தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அமித்ஷாவின் விமர்சனத்திற்கு இன்று பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை இல்லை என்றும் பாவ யாத்திரை எனவும் 2002 இல் நடந்த குஜராத் கலவரம், தற்போது நடந்த மணிப்பூர் வன்முறைக்கு பாவ மன்னிப்பு கேட்கும் யாத்திரைதான் அது” என்று சூடாக பதிலடி கொடுத்தார். இந்நிலையில், பாவயாத்திரை என விமர்சித்த முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது ட்விட் பதிவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர்.

மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009-ம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது..!

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27-ல் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் ஒரு யூடியூப் சேனலில், இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து குன்னம் காவல்துறை கடந்த 27-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த பத்ரி சேஷாத்ரியை குன்னம் காவல்துறை கைது செய்து, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, குன்னத்திலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கவிதா முன்பு காவல்துறை ஆஜர்படுத்தினர். அப்போது, பத்ரி சேஷாத்ரியை ஆக.11 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் காவல்துறையின் பணியா? என குறிப்பிட்டுள்ளார்.

”பாஜக ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான்..! கவுண்ட் டவுன் சொன்ன மு.க. ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான IRS அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.” என தெரிவித்தார்.

பாஜக வாரிசுகளை சொன்னால் 1 மணி நேரம் ஆகும்..! வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் அமித் ஷா கருத்துக்கு பதிலடி கொடுத்தார். முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞராக இருந்த போது தொடங்கிய இளைஞர் அணி, இன்று இளைஞர் அணியின் செயலாளராக இப்போது உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆன பிறகு பல ஆயிரம் இளைஞர்களைக் கட்சியில் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தான் இளைஞரணியில் புதிதாக மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு அனுசரிக்கப்படும் நிலையில், இதை முன்னிட்டு நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த இளைஞர் அணி கூட்டத்தில் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் அமித் ஷாவின் திமுக குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “நமது எதிரிகள் எந்த ஆயுதங்களை எடுக்கிறார்களோ.. அதை ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இது திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு, எதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ.. அதைச் செயல்படுத்தும் ஆட்சி இது.. இதை இந்தியா முழுக்க எடுத்துச் செல்லவே இப்போது இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இருப்பினும், இந்தக் கூட்டணியின் பெயரைக் கேட்டாலே சிலருக்குப் பதறுகிறது. பாட்னா, பெங்களூர் கூட்டங்களை வெற்றி பெற்றுள்ளதைப் பார்த்து பயம்.

இதைப் பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்தியப் பிரதேசம், அந்தமான் என எங்குச் சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார். ஏதோ ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுவதாகச் சொல்கிறார். உண்மையில் கோடிக்கணக்கான மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. உரிமை தொகை, இல்லம் தேடி மருத்துவம், என ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல.. நேற்று அமித் ஷா இங்கு வந்து பேசியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா.. இனி பல மத்திய அமைச்சர்கள் வரிசையாகத் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அமித் ஷா என்ன மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு வந்தாரா.. இல்லை ஏற்கனவே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா.. அவர் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க வந்துள்ளார்.

அது பாத யாத்திரை இல்லை.. குஜராத்தில் 2002-ம் ஆண்டிலும், இப்போது மணிப்பூரில் நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை தான் இது. உள் துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு என்ன செய்தார். அங்கே அமைதி யாத்திரை நடத்த முடியவில்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கவே அமித் ஷா இங்கு வந்துள்ளார்.

நேற்று வந்து திமுக குடும்ப கட்சி என்கிறார். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. வேறு எதாவது சொல்லுங்கள் என நானே கேட்கிறேன்.. எந்தவொரு பாஜக தலைவர்களின் வாரிசும் அரசியலில் இல்லை.. இருப்போர் அனைவரும் நாளையே விலகிவிடுவார்களா.. பதவியில் இருக்கும் பாஜக தலைவர்களின் வாரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்.

அண்ணாமலை: 1000 வருஷத்தை விடுங்க.. 9 ஆண்டுகளை பாருங்க! எல்லாம் தமிழர்களுக்காகதான்..

ஜூலை 29-ம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். இன்று இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

சமீப காலங்களாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ் திருக்குறள் அல்லது பொன்மொழிகளை மேற்கோள்காட்டி பேசி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழின் பெருமை குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதேபோல தமிழ் மொழியில் சில வாக்கியங்களை பேசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசியது விவேகானந்தரின் உரையுடன் ஒப்பிடப்பட்டது.

அதாவது, “அன்புமிக்க, சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ்மொழி, அதன் பாரம்பரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாரதி மண்ணின் மக்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். சமஸ்கிருதத்தை விட, தமிழுக்கு தொன்மை உள்ளது. அதை அனைவரும் கற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக திமுக உள்ளிட்ட தென்னிந்திய கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை வைத்து வந்த நிலையில் பிரதமரின் தமிழ் உரை இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்தது.

இதே ஆண்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, குறிஞ்சி மலர் குறித்து தமிழில் பேசியிருந்தார். இதற்கெல்லாம் டாப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என தமிழில் பேசியிருந்தார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளானது.

இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின உரை, அக்டோபர் மாதம் 10-ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா தொடங்கி சமீபத்தில் பப்புவா நியூ கினி நாட்டின் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டது வரை தமிழ் குறித்த அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடக்க விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றன. அதேபோல கடந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கி நிதியையும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி நரேந்திர தலைமையிலான மத்திய அரசாங்கம் ரூ.11.86 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.198.8 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.

அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன.

இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும் என தெரிய வருகிறது.

மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான்பாய் என்பவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து, அதில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகம்மது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாஜகவை சேர்ந்த 76-வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி கிழக்கு மண்டலத் தலைவர் முரளி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, கட்டிடக் கழிவுகளை எடுக்கும் முகமது பாசிலிடம், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உடனே முகம்மது பாசில் செல்போன் மூலம் அவரது தந்தை அப்துல் காதரை தொடர்பு கொண்டு ஜனார்த்தன குமாரிடம் செல்போனை கொடுத்து தனது தந்தையிடம் அவர் பேச வைத்துள்ளார். அவர் நாளை காலை 8 மணிக்கு வாருங்கள் நேரில் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டிடக் கழிவுகளை எடுக்க விடாமல் தொடர்ந்து ஜனார்த்தனகுமார் மற்றும் அவருடன் வந்த தேவராஜ், முரளி ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜனார்த்தனகுமாரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையிலான காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மாமூல் கேட்டது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் திடீரென ஜனார்த்தன குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பொக்லைன் இயந்திரத்தின் ஹெட்லைட்டை அடித்து நொறுக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சந்தோஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான காவல்துறை, மாமூல் கேட்டு நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட ஜனார்த்தனகுமார், தேவராஜ், முரளி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

திமுக மகளிரணியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. அதாவது குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு மைத்தேயி இன கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ உலகின் மனசாட்சியை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குக்கிராமங்களிலும் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் திமுக மகளிரணி வெளியிட்ட அறிக்கையில், “பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. இதனைக் கண்டித்து 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணியினர், மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். கறுப்பு உடைகளை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.