தொடர்ச்சியாக இரவு 10 மணிக்குமேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை குப்புசாமி..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை மக்களவை தொகுதிக்குட்ட ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி மூலம் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி வாக்கு சேகரித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கோயம்புத்தூர் காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்குமேல், பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைக் கண்ட காவல்துறையினர், அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருடன் அண்ணாமலை குப்புசாமி வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

பின்னர், அங்கிருந்து வந்த அண்ணாமலை குப்புசாமி இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், அண்ணாமலை குப்புசாமி மீது, தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரண்டு பிரிவின் கீழ் அண்ணாமலை குப்புசாமி மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Annamalai: டிஆர்பி ராஜாவுக்கு சிறையில் இருந்து செந்தில் பாலாஜிதான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தருகிறார்..!

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரித்து ஆதரவு திரட்ட உள்ளார். அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும். பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.

தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோயம்புத்தூருக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.

மேலும் பேசிய அண்ணாமலை குப்புசாமி ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார். ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும் என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.

பாஜக இணைந்த 12 மணி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள்..

நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினம் அவுரி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் மேலும் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் சமது. நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது, அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் மாறினார். தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நிலையில், தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார்.

அண்ணாமலை பிரச்சாரம்: பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்தியில், மீண்டும் நமது நரேந்திர மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்றார்.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என திமுக பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை.” என அண்ணாமலை பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

அடிப்படை விஷயம் கூட தெரியல அண்ணாமலைக்கு ..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. இதனால் பரபரப்புக்கு நாளுக்கு நாள் பஞ்சமில்லை. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை, வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்பு மனுவில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலை வேட்பு மனுவில் விவரங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அண்ணாமலைக்கான வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது என்பது வேட்புமனுவில் முறையாக தெரிவிக்கப்படவில்லை, அண்ணாமலையின் வேட்பு மனுவும் முழுமையாக முறையாகவும் நிரப்பப்படவில்லை. எனவே அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக மனு கொடுத்துள்ளது. மேலும், அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர உள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர், “அண்ணாமலை வேட்பு மனுவில் தவறுகள் இருப்பதாக கூறி அவரது மனு பரிசீலனையை நிறுத்தி வைக்க கோரினோம். தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்.

தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரங்கள் ஃபார்ம் 26, Non Judicial பத்திரத்தில் போட வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத் தாளில் தான் போட வேண்டும். ஆனால், ஐ.ஐ.எம்-ல் படித்ததாகவும் உலகிலேயே பெரிய புத்திசாலி என்பது போலவும் பேசும் அண்ணாமலை, நீதிமன்ற கட்டண பத்திரத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார். Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான, ‘India Court Fee’ பத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று இரவு வரை, அண்ணாமலை தாக்கல் செய்த அஃபிடவிட்டை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் வைத்திருந்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது இப்போதுதான் புரிகிறது. Court Fee’ பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் காரணமாகவே அதனை தாமதமாக பதிவேற்றியுள்ளனர்.

ஐ.ஐ.எம்மில் படித்தவரா இப்படி?: எத்தனையோ, சுயேட்சை வேட்பாளர்கள், கையெழுத்து கூட போடத் தெரியாதவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால், IIM-ல் படித்திருக்கிறேன், ஐபிஎஸ் பாஸ் பண்ணியிருக்கேன், எனக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்லும் அண்ணாமலை, நீதிமன்றக் கட்டண பத்திரத்தில் போட்டுள்ளார். நீதிமன்ற முத்திரைத்தாள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தும் பத்திரம். இதில் எப்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்? இதை தேர்தல் அலுவலர் கவனிக்கவில்லையா அல்லது, கவனித்தும், ஆளும் பாஜகவுக்கு கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

அவசர அவசரமாக: அண்ணாமலை வேட்பு மனுவில் குளறுபடி இருக்கிறது என்று சொன்னோம். ஆனால், எங்கள் ஆட்சேபனையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக அவசர அவசரமாக அண்ணாமலை வேட்பு மனுவை இதனால் தான் ஏற்றார்களா என்று சந்தேகம் வருகிறது. நான் ஜெயித்தால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கோவை மக்களிடம் வாக்குறுதி அண்ணாமலை அளிக்கிறார்.

ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெற்றாலும், தவறான ஸ்டாம்ப் பேப்பரில் அஃபிடவிட் தாக்கல் செய்ததால் அவரது வெற்றி உறுதியாக செல்லாது என அறிவிக்கப்படும். எனவே கோவை மக்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். படித்தும் தற்குறியாக இருக்கும் அண்ணாமலைக்கு வாக்குகளை செலுத்தி வீணாக்கி விடாதீர்கள். எங்கள் மாநில தலைமை அலுவலகம் மூலம் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம். விரைவாக நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

என் பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும்…! காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த வியாக்கிழமை அன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார். கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசினார். ‛அப்போது அண்ணாமலை பேசுகையில், “சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறோம், 98% வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல் மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் பதவிக்கு வருவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே தகுதி வாரிசு என்பதுதான். ஏழை எளிய சாமானிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படித் தெரியும்? சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரூ.10,500 வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாஜக சார்பாக, ரூ.10,000 வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால், திமுக ரூ.6,000 மட்டுமே கொடுத்தது.

அந்தப் பணத்திலும், 75% பணம் மத்திய அரசின் பங்காகும். 25% மட்டுமே திமுக அரசின் பங்கு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, ரூ.1,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகாலுக்கு என தனியாக ரூ.1,300 கோடியும், மற்றும் நீர் நிலைகளின் கரைகளை மேம்படுத்த ரூ.560 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி தான். தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிககள் பங்கேற்றனர். இதில் பாஜக பிரமுகரும், அனைத்து இந்து அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ரவி) பங்கேற்றார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னரும் பாஜக கட்சியினர் பயங்கர சத்தத்துடன் மேளங்களை இசைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.

அப்போது பாஜவில் நிர்வாகி, அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் என்ற நபர், அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் கணேஷ்குமார் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணேஷ் குமார் சாலையின் நடுவே நின்று மேளம் அடிக்காதீர்கள், பொதுமக்களுக்கு வழிவிட்டு ஓரமாக நில்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு ரவிச்சந்திரன், கணேஷ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரனை கலைந்து போகும் படி கூறியுள்ளார். ஆனால் ரவிச்சந்திரன், ஆய்வாளரை பார்த்து நான் யார் என்று தெரியுமா நான் தாண்டா ரவிச்சந்திரன் எனது பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும் என ஒருமையில் பேசி, ஆய்வாளரை அடிக்க பாய்ந்துள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து எச்சரித்ததால், ரவிச்சந்திரன் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவலர் கணேஷ்குமார் செம்பியம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். ரவிச்சந்திரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சாலையின் குறுக்கே வேனில் இருந்தவாறு பேச்சு..! வசைபாடிய பொதுமக்கள்..!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரம் மேல், மேப்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நடைபயணம் சென்றார். இதற்காக, பாஜவினர் பல இடங்களில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கொடிகள், பேனர்களை சாலையோரங்களில் வைத்திருந்தனர்.

இரவு 7 மணிக்கு அண்ணாமலை வருவார் என தெரிவித்த நிலையில் இரவு 9.30 மணிக்கு மேல் அண்ணாமலை வந்தார். இதற்காக பூவிருந்தவல்லி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நசரத்பேட்டை, அகரம் மேல், மேப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டது.

வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடந்து போக மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை வழியாக பல கி.மீ. தூரம் சுற்றி ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நசரத்பேட்டையில் இருந்து அகரமேல் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே அண்ணாமலை வேனில் இருந்தவாறு பேசினார். இதனால் போக்குவரத்து தடைபட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வசைபாடியபடி சென்றனர்.

காயத்ரி ரகுராம்: அண்ணாமலையின் கண்மூடித்தனமான ஆதரவாளர் அடிமைகள் கண்மூடித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்…!

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் இன்று பார்வையாளர்களாக நுழைந்த மர்மநபர்கள் புகை உமிழும் வெடி பொருட்களை வீசியதோடு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியிலும் நுழைந்து மேசை மீது ஏறி ரகளை செய்தனர். அந்த இரண்டு இளைஞர்களையும் அங்கிருந்த எம்பிக்களே மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட அன்மோல் ஷின்டே, நீலம் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமிட்ட இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்தாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் எம்பிக்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் சாடி வருகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வினோத் போல, போலி MSME அமைப்பு மோசடி முத்துராமன் போல, இன்று புதிய பாராளுமன்றத்தில் மஞ்சள் வாயு தாக்கியவர்களுக்கு ஒரு BJP வழக்கறிஞர் ஜாமீன் கோரி வக்காலத்து வாங்கினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா இவர்களை உள்ளே அனுமதித்தது ஏன்? என்றும் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் இன்று பாராளுமன்றத்தில் இரண்டு எதிர்ப்பாளர்கள் உள்ளே நுழைந்தனர். இது எப்படி சாத்தியம்? ஒருவரால் எப்படி அவ்வளவு எளிதாக நுழைய முடியும்? இடத்தை நாசமாக்கி, இது தாக்குதலா? பாதுகாப்பு மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலையின் அடிமை வார்ரூமுக்கு போலிச் செய்திகளைப் பரப்ப அளவு இல்லை. இப்போது பிஜேபி எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்திருப்பது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது என்று ஒவ்வொரு ஊடகமும் சொல்கிறது. அண்ணாமலையின் கண்மூடித்தனமான ஆதரவாளர் அடிமைகள் கண்மூடித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்.

அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள்…! அண்ணாமலையை காயத்திரி ரகுராம் கடுமையாக விமர்சனம்..!

திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாக பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் ஒரு தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையுமே குறை சொல்ல முடியாது. தமிழக காவல்துறையில் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் காவல்துறையே மோசம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். நேற்று அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை தொழில்முறை பார்வையோடு அணுக வேண்டும். இதற்காக மொத்த அமலாக்கத் துறையுமே இப்படித்தான் என்று சாயம் பூச முடியாது.

ஆனால், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய கருத்திற்கு காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள். திமுக files – திமுகவில் யாரேனும் தவறு செய்தால், அரசியலில் இல்லாத குடும்பத்தினர் அனைவரையும், ஒட்டுமொத்த தமிழக அரசையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தையும் குற்றம் சாட்டி மச்சூரிட்டி குறித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

எஸ்வி சேகர்: “அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்”

2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜூலை மாதம் 28 -ம் தேதி  ‘என் மண் , என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைக் கடந்து ஒவ்வொரு தொகுதி வாரியாகச் சென்று மக்களை சந்தித்து அண்ணாமலை வருகிறார்.

இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை தினமும் 1 கி.மீ தூரம் கூட நடப்பதில்லை என்றும், அவருக்கான பிரத்யேக ஏ.சி பேருந்தில்தான் செல்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், “அண்ணாமலை இருக்கும்வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது. அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு வராது.

நடைபயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அண்ணாமலைக்கு பெரிய லாபம்” எனக் கூறியுள்ளார். சாயம் வெளுக்குது.. வெறும் 5% மட்டும் நடந்த அண்ணாமலை.. எஸ்வி சேகர் மேலும், “தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். தலைவருக்கு பேருந்தில் நடைபயணம் செல்லவே நேரம் இல்லை. சிங்கம் என அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் கிழ சிங்கம் ஆனது போல தெரிகிறது. இந்த நடைபயணத்தால் ஒரு தாக்கமும் நடக்காது.

“அண்ணாமலை என்பது தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நான் 2 வாரமாக நாடகமே போடவில்லை. எனது டிராமா காமெடியை விட அண்ணாமலை நடைபயண காமெடி நன்றாக சிரிப்பு வருகிறது. அண்ணாமலை அதிமுக கூட்டணி வரக்கூடாது எனப் பேசி வருகிறார். அதிமுக இருந்தால் தான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம். நட்பு என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பினால் எப்படி கூட்டணி சரியாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.