அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் காட்டம்.! நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள்..!

சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மீதான பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அண்ணாமலை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்திருந்தார். இந்நிலையில் அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் இது வெட்கக்கேடானது என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ள பாஜக ஆதரவாளரான தேவநாதன் யாதவ் தனியாக 24 மணி நேர செய்தித் தொலைக் காட்சியையும் நடத்தி வருகிறார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தல் போட்டியிட்டார். இதுமட்டுமின்றி, 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ள மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் தேவநாதன் இருந்து வருகிறார்.

மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி 50 கோடி ரூபாயை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அது போல் ரூ 525 கோடி வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிதி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவ்வை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் தேவநாதனின் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்கள், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தமிழ்நாடு உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அண்ணாமலை தெரிவித்தார்.

இதற்கிடையே அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் இது வெட்கக்கேடானது என அண்ணாமலையை அதிமுக காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள்/ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல். பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது.

அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது. பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள். மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்.” என விமர்சித்துள்ளார்.

கே.சி. பழனிசாமி: அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறார்..!

அண்ணாமலை குப்புசாமியின் தொடர் விமர்சனங்களால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் அதிமுகவை கூட்டணியில் எப்படுவது இணைத்து விடலாம் பாஜக முயற்சித்ததாக சொல்லப்பட்டது. எனினும், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அதிமுக தலைமை உறுதியாக கூறியது.

இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அதனால் அதிமுகவினர் அண்ணாமலை குப்புசாமியை காட்டமான விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கே சி பழனிசாமி,  அம்மா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வி.கே. சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தமிழக வாக்காளர்களும் குரல் கொடுத்தார்கள். நான் தேர்தல் ஆணையத்தில் அதற்கு வழக்கு தொடுத்திருந்தேன்.

ஓ.பி.எஸ் அதன் பிறகு தர்மயுத்தம் செய்தார். அம்மாவால் 2011-ல் வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலாவின் குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று போராடி அதில் தொண்டர்கள் வெற்றி கண்டார்கள். அதற்கு பிறகு EPS & OPS இருவரும் இணைந்து தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிற விதியை பாஜக ஆதரவோடு திருத்தி பொதுக்குழுவால் தலைமை, ஒற்றை வாக்கு இரட்டை தலைமை மற்றும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவேண்டும் என்கிற எல்லா EPS & OPS நடவடிக்கைகளுக்கு பாஜக துணைபோனது.

ஆனால் இன்று அண்ணாமலை இந்த கருத்துக்களை சொல்வது யார் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார்களோ, அதிமுகவை பாஜகவிற்கு துணை அமைப்பாக கொண்டுசெல்ல யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்கிற பாஜகவின் முயற்சியை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஒன்றுபட்டு முறியடிப்பான்.

அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறாரே ஒழிய பாஜகவை வளர்ப்பதில் அல்ல. இந்த தேர்தலில் தலைகீழாக நின்றும் அதிமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. பாஜக வாக்கு வங்கியை உயர்த்த முடியவில்லை என்கிற விரக்தியின் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள்.

அதிமுகவை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவோம். தொண்டர் பலத்தை உறுதிப்படுத்துவோம் தேர்தலுக்கு பிறகு தொண்டர்களால் ஒரு தலைமையை உருவாக்க முயற்சிப்போம் என இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்தார்.