வருண் குமார் மீது சீறும் சீமான்: 36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர் கட்சி, பிரிவினைவாத இயக்கமா..!?

சண்டிகரில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொடங்கி வைத்த 5-வது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்ள வருண்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

வருண்குமார் பேசுகையில் , “எனது குடும்பம் இணையதள மிரட்டல் , சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனது குடும்ப புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து 2 எப்ஐ ஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை . அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை”. என வருண் குமார் பேசியிருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூரில் செய்தியாளர்கலின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. வருண்குமார் ஐபிஎஸ் எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்? அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார்? தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.