ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன..?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமெரிக்காவின் பங்கு என்ன என ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த சீனாவின் ‘DeepSeek’..!

ஜெமினி, சாட்ஜிபிடி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் டீப்சீக் (DeepSeek) பக்கம் திரும்பியுள்ளது. டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆனாலும் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், AI -க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தன்னுடைய வகுப்பு தோழர்களுடன் இணைந்து லியாங் 2008-ஆம் ஆண்டு உள்நாட்டு பங்குகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார். வெளிநாட்டு அனுபவங்கள் இல்லாத அவர்கள், பல்வேறு உத்திகளைப் பரிசோதித்த பிறகு, 2015-ல் ஹை-ஃப்ளையர் தளத்தை தொடங்கினர்.

2016-ஆம் ஆண்டு அதனுடன் இயந்திர கற்றலை (மெஷின் லேர்னிங்) இணைத்தனர். இது புதிய காரணிகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவியது. 2018-ஆம் ஆண்டு வாக்கில், இயந்திர கற்றல் அவர்களின் தயாரிப்புகளில் முழுமையாக இணைக்கப்பட்டது. 2023-ல், ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கை பொது நுண்ணறிவு ஆய்வகத்தை ஹை-ஃப்ளையர் தொடங்கியது. அதே ஆண்டில் ஹை-ஃப்ளையரை பிரதான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கொண்டு, அந்த ஆய்வகம் டீப்சீக் ஆக மாறியது.

AI உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் டீப்சீக் பிடித்துள்ளது. பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் AI -யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட AI முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன.

இதில் டீப்சீக்-வி3 தற்போது பரவலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதன் எதிர் விளைவுதான் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்க காரணம். இது அமெரிக்க டெக் வல்லுநர்களின் பாராட்டினை பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் டீப்சீக்-வி3 பொது பயன்பாட்டுக்கு வெளியானது. கடந்த 8-ஆம் தேதி இந்தியாவிலும், 10-ஆம் தேதி அமெரிக்காவிலும் இது அறிமுகமானது. வலைதளம் மற்றும் செயலி வடிவில் இதனை பயனர்கள் பயன்படுத்தலாம்.

தமிழ் மொழியிலும் இதை பயன்படுத்த முடியும். கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் டீப்சீக் AI தருகிறது. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14.8 டிரில்லியன் டோக்கன்களின் டேட்டா செட்களை வெறும் 55 நாட்களில் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்..!

உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவை கடந்த திங்கள் கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்கா தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை எதிர்த்து போட்டியிட்ட படட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தனது முதல் உரையில், “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன்.

நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும்.

இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய, அதே நேரம் அமெரிக்க எல்லைகளை மிக முக்கியமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க மறுக்கும் ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது.

எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்று இருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” என டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை” எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரை டொனால்ட் ட்ரம்ப்ய நிகழ்த்த உள்ளார்.

இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள் அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது

அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப்க்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

முதலீட்டாளர்களை ஏமாற்ற கவுதம் அதானி லஞ்சம், முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா..!

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்த நிலையில் இந்த அமெரிக்கா குற்றச்சாட்டு தொழில் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானி, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்ததாக அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் உறுதி செய்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

அமெரிக்கா அதிரடி: சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் நாடு கடத்தல்..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் சட்டவிரோதமாக நுழைந்த 29 லட்சம் பேரில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் மட்டும் 90,415 பேர் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அமெரிக்க அரசு அவர்களின் சொந்த நாட்டிற்கே நாடு கடத்தி வருகிறது. இதன்படி கடந்த 2024-ஆம் நிதியாண்டில், இந்தியா உட்பட 145-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.60 லட்சம் பேரை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. கடந்த 22-ஆம் தேதி கூட தனி வாடகை விமானம் மூலம் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi: வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள்..!

4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு இந்தியாவில் பாஜக தலைவர்கள் மத்தயில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாஷிங்டனின் விர்ஜினியாவின் புறநகரான ஹெர்ன்டனில் இந்தியர்களுடனும், ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளிடம் நேரடியாக பேசுபவன் என்கிற பேச்சுக்கள் எல்லாம் போயே போய்விட்டன. அதெல்லாம் இப்போது காணாமல் போய் வரலாறாகி விட்டன.

இதோடு, பாஜகவின் கூட்டணியும் இப்போது இரண்டாக உடைந்து விட்டது. இனிவரும் தேர்தல்களில் அவரும் திணறப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் 246 சீட்களை பெற்றதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். இதில் நிறைய பணம் விளையாடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே செயல்பட்டது. மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்யவசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு, வேறு தேர்தல் தேதி வடிவமைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், மோடியின் அடிப்படை சித்தாந்தங்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரசாரத்தின் பாதியிலேயே தங்களால் 300, 400 சீட்களை எட்ட முடியாது என்பதை மோடி உணர்ந்து விட்டார். அதனால் தான் உளவியல் ரீதியாக குழம்பிப் போன அவர் கடவுளிடம் நேரடியாக பேசுபவன், நான் விசேஷமானவன் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். இப்போதும் நாடாளுமன்றத்தில் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் கூட மக்கள் அவரை ஏற்காததால் விரக்தி அடைந்துள்ளார். பாஜகவால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகத்தான் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு, நம்பிக்கை, பாரம்பரியம், மொழி, உணவு எல்லாம் இருக்கின்றன. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால், இதை பாஜகவால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் விட நாக்பூர் தலைமையகம் தான் பெரிது என எண்ணுகிறார்கள். வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள், மக்களை, பாரம்பரியத்தை, மொழி, மதத்தை அவமதிக்காதீர்கள், அனைவரும் மதித்திடுங்கள் என்கிறோம் நாங்கள் என ராகுல் காந்தி பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி: ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்” எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018-இல் கைதானார்கள்.

கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே? “சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்” எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா?

“அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமை இல்லை. எங்களுக்கு மரியாதை, தனித்துவம் உள்ளது” எனப் பெருமை பேசியிருக்கிறார். “அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை” என்றால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் டெல்லிக்கு ஏன் காவடி தூக்கினீர்கள்? கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்து நீக்குவார்; கட்சியை விட்டு கட்டம் கட்டுவார்; எம்.எல்.ஏ பதவியை எல்லாம் பறித்ததில்லை. ஆனால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அதிமுக எம்.எல்.ஏ-கள் 18 பேரை நீக்கிய நீங்கள் அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை என்று சொல்ல நா கூசவில்லையா? தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு, அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றவில்லையா? உங்களின் தனித்துவ அடையாளமே பாதம்தாங்கிதானே?

“அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீதான தாக்குதல் போலீஸுக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது” என பழனிசாமி புலம்பியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். ஆனால், ‘சாமளாபுரத்தில் பெண்கள்தான் போலீஸை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது’ என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிசாமி.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளியது யார்? உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்ல, போலீஸாரால் போலீஸுக்கே பாதுகாப்பில்லாமல் போனது எல்லாம் ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல் மறந்துவிட்டதா? “உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள்” என உளறிக் கொட்டியிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்போலோவில் இருந்த போது ஆரம்பித்த உளறல்களை இன்னுமா நீங்கள் நிறுத்தவில்லை? கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. புகைப்படங்களும் வெளியிட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதை இன்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதலமைச்சரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. 75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்’ என எம்.ஜி.ஆர் பாடிவிட்டு போனது பழனிசாமிக்குத்தான்!

“இட்லி சாப்பிட்டார்கள்… வார்டுக்கு மாறிவிட்டார்கள்… விரைவில் வீடு திரும்புவார்கள்” என அ.தி.மு.க நிர்வாகிகளும் அமைச்சர்களும் பொய் பூக்களைக் கோத்து, கதை மாலையைக் கட்டியதை போல எங்களுக்குக் கட்ட தெரியாது. திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை.

ஜெயலலிதா மயக்கமான பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டன. ஆஞ்சியோ பரிந்துரைக்கப்பட்டும், அதனை அப்பல்லோ வழங்காத வகையில் சசிகலா உள்ளிட்ட 5 பேர் திட்டமிட்டுச் செயல்பட்டனர். முதல்வர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அவர் இறந்த தேதியே தவறு. ஜெயலலிதா இறப்பை மறைத்து, அறிவிப்பைத் தாமதப்படுத்தத் தந்திர நடவடிக்கை’ என்றெல்லாம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அக்கு வேறாகப் பிரித்தார்கள். காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என்ற திருவள்ளுவரின் குரலை மேற்கோள் காட்டி, வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்” என நீதிபதி ஆறுமுகசாமி குறிப்பிட்டார்.

அந்த நரிகள் கூட்டம் எங்கள் தலைவரின் உடல்நிலையைப் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா? தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.