திருமாவளவன் விமர்சனம்: வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக.. அதிமுகவுக்கு சவால் விடுக்கிறது..!

வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது என தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி தவெகவை கிண்டல் செய்து பேசினார். ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2-ஆம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2-வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2-வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2-வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் யாருக்கு பதில் சொல்கிறார்.

அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.சி வோட்டர் சர்வே அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2-வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அப்படி உசுப்பேத்த பேசியிருப்பார்..!

வரும் சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். ஊசிலம்பட்டியில் காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்றத்தில் பேச முயன்றேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டனர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாப்படுத்த அவ்வாறு பேசுவர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்னர். செங்கோட்டையன் டில்லி பயணம் சென்றது குறித்து எனக்கு தெரியாது. தவெக தலைவர் அதிமுகவை விமர்சித்து பேசாததற்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, புதிய கட்சிகள் கூட பாராட்டும் விதமாக ஆட்சி செய்தனர். அதனால் தான் அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால் நல்லது..!

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால், அவருக்கு நல்லது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

அப்போது, தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு வந்தோம். எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலாளர்களை வைத்து தாக்கினார்கள். அதுதான் உண்மை. அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன? எங்களை தாக்கிய பின், அடியாட்களை தலைமை கழகத்திற்கு அழைத்து வந்துவிட்டு எங்கள் மீது பழிபோகிறார்கள். இது அனைத்தும் காவல் துறையினரின் பதிவுகளில் உள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற சூழல் வரும். அதனை திரும்ப திரும்ப சொல்கிறேன். அதிமுக வெல்லவில்லை ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வெற்றிபெற கூடிய வாய்ப்புகளே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம் என்று தானே என்னிடம் ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: சாத்தியமில்லை…!பிரிந்தது பிரிந்தது தான்..!

ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலரும் இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் என்ன ஆளுங்கட்சியா? எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் அமித் ஷாவிடம் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதேபோல் உருட்டல், மிரட்டல் விடுப்பதற்கு நாங்கள் என்ன ஆளுங்கட்சியாகவா இருக்கிறோம். டாஸ்மாக் ஊழல் செய்தது யார்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.

அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். திமுகவை தவிர்த்து வேறு கட்சியும் எதிரி கிடையாது. அதனால் தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எங்களுடன் இணைத்து கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: திமுகவை வீழ்த்த வேண்டும்..! அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்..!

திமுகவை வீழ்த்த வேண்டும், அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். காலையிலே இது குறித்து விளக்கம் அளித்துவிட்டேன்.

எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும். அதை எப்படி இப்போது கூற முடியும். 2019 -ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரி மாதத்தில் தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். இப்போது கூட்டணி இருக்கிறதா, இல்லையா என கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.

அமித் ஷா கூறியது அவரது கட்சியின் விருப்பம். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து முடிவு செய்யும் போது, அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து தெரிவிக்கப்படும். அது குறித்து கவலையே பட வேண்டாம். எங்களுக்கு , திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது ஒன்றே ..!

நமக்கு இடையே சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது. என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என பேசப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒன்று நமக்கு இடையே சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் நம்முடைய இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026-ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள். அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது.

மு.க.ஸ்டாலின்: மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம்..!

இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் மும்மொழிக் கொள்கை கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்கு சென்று யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம். நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3-வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது.

இந்தி மொழித் திணிப்பு மூலமாக, மாநில மொழிகளை அழிக்க, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர்.இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைக்கின்றது மத்திய அரசு. இப்படி கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால் மொழித் திணிப்புகள், நிதி அநீதிகள் செய்கின்றனர். எனவே இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும்; தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை தெரிவித்து அதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று அறிவிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி vs துரைமுருகன்: “நீங்க விவசாயினா நாங்க என்ன IAS ஆபீசரா..!?”

“நீங்க விவசாயினா? நாங்க என்ன IAS அதிகாரியா?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் ரிப்ளை கொடுத்துள்ளார். நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவசாயி என எடப்பாடி பழனிசாமி பேசியதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் துரைமுருகன், “நீங்க விவசாயினா? நாங்க என்ன IAS அதிகாரியா?.. நானும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் தான். நானும் ஏர் ஓட்டும் வேலை எல்லாம் பார்த்தவன் தான். நல்லா சவுண்ட கிளப்புறீங்க சார்.” என எடப்பாடி பழனிசாமியை நோக்கிப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அண்டை மாநில முதலமைச்சர்களுடன் தற்போது நெருக்கமாக இருக்கும் போது, நமது முதலமைச்சர் தண்ணீர் பிரச்னையை சரி செய்யலாமே?

அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதலமைச்சர்கள் விரோதியாக இருந்தார்களா? எத்தனையோ ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அவற்றால் பயனில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். இப்போது போய் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறிவிடும். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப் பாருங்கள் என கலைஞரிடம் அவர் தெரிவித்தார். இனி பேச முடியாது என கலைஞர் கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது. அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்வதால், பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு அளித்த கர்நாடக அரசு, காவிரி மேலாணை வாரியத்தில் விவாதிக்க வேண்டும் என்றனர். நம்மை மடக்க சொலிசிட்டர் ஜெனரலிடம் முறையிட்டனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று, காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்ட திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது. திமுக கொண்டு வந்ததாலேயே தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தியது.”நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் 22 வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறோம்.

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டு செல்வது, இப்போதுதான் நடப்பது போல காட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் விற்பனை செய்யப்பட்டன. கனிமங்களை எடுக்கக் கூடாது என ஒருவர் வழக்கு போட்டார். சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் தடை செய்ய முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. அனுமதியின்றி கனிம வளங்கள் கொண்டு சென்றதாக கடந்த 4 ஆண்டுகளில் 21,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் குவாரிகளில் ஆய்வு நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை விட வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால், அரசின் டாமின் நிறுவனம் லாபத்தை ஈட்டியுள்ளது.” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்: அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது..! இந்த முறை அதுவும் கிடைக்காது..!

அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது, இந்த முறை அதுவும் கிடைக்காது, தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகரும், முன்னாள் MLA -வும், எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026-ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலை முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது” எனத் தெரிவித்தார்.

டிடிவி தினகரன்: திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அறிவார்ந்த கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் கலங்கரை விளக்கமாகப் பின்பற்றி, தமிழகத்தின் புகழை தரணி எங்கும் பரப்பி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன்.

தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவத்தை கழகக் கொடியில் ஏந்தியும், இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை மனதில் நிலைநிறுத்தியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடவும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும், நாம் அனைவரும் இணைந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 -ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் அளவில்லா அன்போடும் ஏகோபித்த ஆதரவோடும் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அம்மா அவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிடும் வகையில் தொடங்கப்பட்ட நம் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் திரு.R.சாமி, செயல் வீரர் திரு.P. வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நம்மை விட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தாலும், விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரமும், காலமும் அருகில் வந்துவிட்டது.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்ட இயக்கங்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்கமாக நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்று அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டினோம். அதன் தொடர்ச்சியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றதோடு உள்ளாட்சி தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வாகை சூடி, முக்கிய பொறுப்புகளையும் வென்றுகாட்டினோம்.

நாம் பெற்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வெறும் வாக்குகள் அல்ல, நம் இயக்கத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றுகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு, இரும்புப் பெண்மணியாக செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை தந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களைக் கொண்டதுதான் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நமது இயக்கம் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் பெருங்கடமையை முன்னேடுத்துச்செல்லும் ஒரு பொது வாழ்கை பயணம் என்ற எண்ணத்தோடு களப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கிவரும் அன்பை என்றென்றும் உறித்தாக்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, ஊக்கம் மற்றும் உறுதுணை என்ற இந்த பாசப் பிணைப்பை எவராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை, மிகுந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பின் ஆட்சி பீடத்தில் நம்மால் அமரவைக்கப்பட்டவர்கள், நம் புரட்சித்தலைவி அவர்கள் தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கட்டிக் காத்த இயக்கத்தை தங்கள் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மூடுவிழா காணும் முயற்சியில் மும்முரமாகவும், முழுமூச்சாகவும் இறங்கியுள்ளனர். எந்த தீயசக்தியை வீழ்த்த புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் போராடினார்களோ அதே தீய சக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்றுகொண்டிருக்கும் துரோகக் கும்பலை இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அதனை நிறைவேற்ற மறுக்கிறது. பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கும் நிலையில், குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுகவின் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

சவால்களை எதிர்கொள்வதற்கு உரிய துணிச்சலும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய துணிச்சல் மற்றும் மன உறுதியோடும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடி வரும் நாம், நமது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்திடுவோம். மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தவறிய மக்கள் விரோத திமுக அரசை அடியோடு துடைத்தெறிந்திடும் நோக்கத்தில், திமுக அரசின் அவலங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் முன் நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.

அதே நேரத்தில் மக்கள் விரோத திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும் நேரமும் நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி மக்கள் விரோத திமுகவை வீழ்த்திடுவோம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.