அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடிநீர், மின் கட்டண உயர்வு தள்ளுபடி..!

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். டெல்லி டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

அப்போது, “மற்ற கட்சி தலைவர்களைப் போல் நான் அரசியல்வாதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தேன். நாட்டின் கல்வி நிறுவனத்தில் படித்தவன் நான், அதனால் எப்படி வேலை செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நான் சிறையில் இருந்தபோது, துணைநிலை ஆளுநர்தான் ஆட்சியை நடத்தினார்.

அப்போது, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். இப்போது நான் வெளியே வந்துவிட்டேன். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

டெல்லியில் கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு இலவச பேருந்துகள் என அனைத்து வகையான வளர்ச்சியையும் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. உழைத்தவர்களுக்கு வாக்களியுங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. உங்கள் பிள்ளைகளுக்காக என்ன செய்தார்கள் என்று பாஜகவிடம் கேளுங்கள். டெல்லி மக்களுக்காக அவர்கள் செய்த ஒரு வேலையையாவது அவர்களால் காட்ட முடியுமா” என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

அதிஷி மெர்லினா சிங்: அரசு பங்களா தேவையில்லை நாங்கள் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம்..!

பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தெரிவித்தார்.

டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இத்தனை தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா சிங் பதவிறே்றார்.

இந்நிலையில் டில்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக் ஸ்டாப் சாலையில் கடந்த 6-ஆம் தேதி அதிஷி மெர்லினா சிங் குடியேறினார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. மேலும் அதிஷி மெர்லினா சிங்கை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பாஜகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பாஜக எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பாஜகவினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் என காரசாரமாக அதிஷி மெர்லினா சிங் பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் 22 மாநிலங்களுக்கு இலவச மின்சாரம் தயாரா..!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, பாஜவின் இரட்டை இன்ஜின் மாடல் பல மாநிலங்களில் தோல்வி அடைந்து வருகிறது. அரியானா, காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தோல்வி அடைவது உறுதி என்பதை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரட்டை இன்ஜின் என்பது, இரட்டை ஊழல், இரட்டை கொள்ளை ஆகும். பாஜக என்பது ஏழைகளுக்கு எதிரான கட்சி. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் 22 மாநிலங்களுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவிக்க பிரதமர் மோடி தயாரா? அப்படி அறிவித்தால், பிரதமர் மோடிக்காக, பாஜகவுக்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன் என அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: ஆர்எஸ்எஸ் தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா?

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? கேள்வியெழுப்பினார்.

டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜன்தா கி அதலாட் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை வழங்கினோம்.

மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், எங்களின் நேர்மையின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நேர்மையற்றவர்கள் என்று நிரூபித்து அவர்களைச் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் காயமடைந்ததால் நான் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு மரியாதையை மட்டும்தான் நான் சம்பாதித்தேன்; பணத்தை அல்ல. ஊழலில் ஈடுபடவோ, முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு தலைவராக நான் சொல்லிக்கொண்டது இல்லை. இன்னும் சில நாட்களில் நான் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன். எனக்கென ஒரு வீடுகூட இல்லை. இந்த பத்தாண்டுகளில் நான் அன்பை மட்டும் தான் சம்பாத்தித்துள்ளேன்.

அதனால் தான் பலர் தங்களின் வீடுகளை எடுத்துக்கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நவராத்திரி தொடங்கியதும் முதலமைச்சர் வீட்டில் இருந்து வெளியேறி உங்களில் ஒருவனாக வாழப்போகிறேன்.” என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத்-க்கு, ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம், மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா? பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா? பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பினார்.

ஆம் ஆத்மி தகவல்: அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை பதவி விலகல்..!

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஆளுநரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்’ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

எனவே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதலமைச்சர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேட்பேன். நான் நேர்மையானவன் என கருதி மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதலமைச்சராக்கிய பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன்” என அறிவித்தார்.

இதனையடுத்து, ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும், அப்போது, முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Sanjay Singh: நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது. ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார் நரேந்திர மோடி. ஆனால் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். இப்போது மோடி வாஷிங் பவுடர் வந்துள்ளது. அது உங்கள் ஊழல்கள் அனைத்தும் தூய்மையாக்கும்” என பேசினார்.

Bhagwant Mann: “திஹார் சிறையில் கெஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து திஹார் சிறை அடைத்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பஞ்சாப் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பகவந்த் மான் பேசுகையில், “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவரைப் பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டேன்.

கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? பள்ளிகளை உருவாக்குகிறார். மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கி வருகிறார். நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்து வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள். பிரதமருக்கு என்ன வேண்டும்? அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான நபர், அவர் வெளிப்படையான அரசியலைத் தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனால்தான் அவர் இவ்வாறு நடத்தப்படுகிறார்.

நான் எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு அவர் தன்னைப் பற்றி பேசவில்லை, அவர் என்னிடம் பஞ்சாப் பற்றி கேட்டார். நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, ஆம் ஆத்மி கட்சி நாட்டில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும்” என பகவந்த் மான் தெரிவித்தார்.

“மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் கட்சியை ஒடுக்க நினைக்கிறது..!”

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் செய்தியாளர்களை அமைச்சர் அதிஷி மர்லினா சந்தித்தார். அப்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சோதனைகள் மூலமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மதுபான கொள்கை ஊழல் என்ற பெயரில் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது, சிலருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டும், அமலாக்கத்துறை இதுவரை ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை.

ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிமன்றம் கூறிய நிலையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அமலாக்கத்துறை ஒரு உறுதியான ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அரசுதரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியிருந்தது. வீடியோ ஆதாரங்கள் வழங்ப்பட்டது, அதில் ஒலி நீக்கப்பட்டிருந்தது.

இப்போதும் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர், எம்.பி., என்.டி குப்தா, அரவிந்த் கேஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் கட்சியை ஒடுக்க நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்” என அமைச்சர் அதிஷி மர்லினா தெரிவித்தார்.

டெல்லியில் தொடரும் பதற்றம்..! அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகிறாரா..!?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி செய்து வருகிறது. டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, 3-வது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சம்மனை வாங்க மறுத்த அர்விந்த் கேஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகாத நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் கட்சி தரப்பில் அஞ்சப்பட்டது. இந்நிலையில்தான் புதன்கிழமை 5-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் வருகிற 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் நரேந்தர மோடியின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.