எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி என்று சொல்வது தான் பெரிய பித்தலாட்டம்

தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக ஸ்டாலின் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய பித்தலாட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் மு.க. ஸ்டாலின்.

இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?

தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது. அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.

திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய ஏய்ப்பு (Humbug!) ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.

மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்! இத்தனை நாட்கள் “என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?” என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்?

மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை! என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்: ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்..! வரலாறு முக்கியம்..!

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது. என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக வலுவான கூட்டணியை தொடரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் அரசியல் ரீதியான காரசார விவாதம் தொடங்கிய நிலையில் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம். மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா? எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.’ என தன்னிலை மறந்து பேசி இருக்கிறார்.

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதை, பொன்னேரியில் அவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். காங்கிரஸின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும், கைகட்டி நின்றவர்கள் யார். 2011 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார்.

இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். இந்தியா என்பது ஒரே நாடு. இந்தியா என்ற நாடு உருவான பிறகே, நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போதும் பிரிக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசோடு மோதுவது ஆரோக்கியமானது அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்ற பிறகு, அவரைப் பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அவர், இந்தியாவின் உள்துறை அமைச்சர். தமிழ்நாட்டையும் சேர்த்துதான் அவர் ஆண்டு கொண்டிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ” எப்போதும் அப்படித்தான் இருக்கும். ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கலாம் என யார் நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்களும் விட மாட்டார்கள். மத்திய அரசும் விடாது.” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

விஜய்: ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயல் இருக்கவேண்டும் ..!

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும் என என விஜய் தெரிவித்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும் என விஜய் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்திற்கும் கடிதம் அனுப்பிய ஸ்டாலின்..!

ஒருபக்கம் மும்மொழி கொள்கை, இன்னொரு பக்கம் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என தமிழ்நாட்டில் மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு, கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்திற்கும் இந்த கடிதம் அளிக்கப்பட உள்ளது. அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்? ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம்.

அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.கே. சேகர்பாபு கருத்து: காளியம்மாள் வெளியே நாதக..! உள்ளே திமுகவா..!?

காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது.

இதனால் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

மயிலாடுதுறை இரட்டைக் கொலை விவகாரத்தில் காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா..!?

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து புகார் அளித்ததால் இருவர் வெட்டி படுகொலை வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக வாடிக்கையாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு, இவர்கள் கள்ளச்சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கள்ளச்சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ், மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரிசக்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். அதையடுத்து கள்ளச்சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மூவேந்தனை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறையில் இருவரும் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு காரணம் கள்ளச்சாராய விற்பனை அல்ல என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தான் கொலை சம்பவத்திற்கு காரணம் எனவும், தினேஷ், மூவேந்தர் ஆகியோர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. மது விற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவம் நடந்ததாக கூறுவது தவறு, கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.

திரு. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?

இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை: விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பில் அரசியல் கிடையாது..!

விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பில் அரசியல் கிடையாது என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்-க்கு சிஆர்பிஎஃப் Y பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்: முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி புகழ் பாடுகிறார்..! உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுகிறார்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டப்பேரவை தேர்தலை அதிமுக சந்திக்கும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த காலங்களை பார்த்துப் புரிந்து கொள்ளலாம்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்..!

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.