விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ: நான் பாலியல் தொழிலாளியா சீமான்.. எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது..!

நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுதொடர்பாக சீமான் வீட்டில் நடைபெற்ற சண்டை, விஜயலட்சுமியின் அடுத்தடுத்த வீடியோக்கள் என விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சீமான் புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என கனிமொழி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜயலட்சுமி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான். என்னை பாலியல் தொழிலாளி என்று எப்படி சொல்லலாம். நான் பாலியல் தொழிலாளி என்றால், எதற்காக பெங்களூருவில் என்னுடைய சகோதரியுடன் கஷ்டப்பட போகிறேன்?. இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது. என்ன செய்ய போகுது பார்” என விஜயலட்சுமி வேதனையில் கண்ணீர் விட்டபடி வீடியோவில் பேசி இருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீமானை சரமாரியாக கேள்வி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என சீமானை காட்டமாக விமர்சித்து விஜயலட்சுமி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 -ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் காவல்துறை வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், சீமான் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்க வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்னக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 -க்கு பிறகு தொடர்பு இல்லை” என்று காட்டமாக பேசினர். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்கனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேன் என மிரட்டுவாங்க..

இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த..

நடிகை யாருன்னே தெரியாது… திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என விஜயலட்சுமி தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

சீமான் வீட்டின் காவலாளி கைது..! துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை, அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையினரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் காவல்துறை ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது காவல்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியை நீட்டிய காவலாளி அப்போது காவல்துறையினரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்: ஆறு ஏழு முறை கருக்கலைப்பு.. விஜயலட்சுமி விவகாரம் சீமான்…!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

விஜயலட்சுமிக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் குறித்து விரிவான அறிக்கை வேண்டும்..!

விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும்.

நாம் தமிழர் கட்சி மண்டல பொறுப்பாளர் பிரபு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2006-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடந்த போரில் 2 லட்சம் தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் இலங்கையில் போர் முடியும் வரை தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள், எதிர்ப்புகள், வழக்குகளை சந்தித்துள்ளோம்.

நாம் தமிழர் கட்சி உருவாவதற்கு தமிழ் தேசியம் பேசக்கூடிய அனைத்து ஆர்வலர்களும் உறுதுணையாக இருந்துள்ளோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை தன்னிச்சையாக செயல்படுவதோடு அதிகார பகிர்வை கட்சியில் உள்ள யாருக்கும் கொடுக்காமல் அனைத்து பொறுப்புகளுமே தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார்.

கட்சிக்காக குடும்பத்தை இழந்து, பொருளாதாரத்தை இழந்து பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதோடு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் இன்று நாம் தமிழர் கட்சி கொடி பறப்பதற்கு காரணமாக இருந்த யாரையும் தன் பக்கத்தில் வைத்து கொள்ள சீமான் தயாராக இல்லை.

கட்சிக்காக அவர் ஒவ்வொரு முறை நிதி கேட்கும்போதும் பல கோடிக்கு மேல் எங்களது பணத்தை அள்ளி வழங்கியுள்ளோம். இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் 1,000 டன் உணவு பொருட்கள், பல கோடி பணங்களும் தமிழகத்தில் இருக்கக்கூடிய சொந்தங்களால் வழங்கப்பட்டது. இறுதியில் அந்த உணவு பண்டங்களும், பணமும் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையவில்லை. கட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலோடு அவர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்ற பட்டியலையும் சேர்த்து ஒரு வெள்ளை அறிக்கையாக சீமான் வழங்க வேண்டும். விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அதிகார பகிர்வை பிரித்து வழங்கி கட்சியை வளர்ப்பதற்கான முயற்சியில் சீமான் ஈடுபட வேண்டும்.

கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதற்கு தயாராகி வரும் நிலையில் சீமான் விரைந்து ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என பிரபு தெரிவித்தார்.

விஜயலட்சுமி கதறல்: அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க?

மலையாள திரை உலகில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை. இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அனைத்துத் துறைகளிலும்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களில் தெரிய வருகிறது என கூறியிருந்தார்.

சீமானின் இந்தப் பேட்டிக்கு பதில் தரும் வகையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார். அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க? அவங்க கேள்வி கேட்டது பாலியல் குற்றச்சாட்டு பற்றி.. அதாவது நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையை 14 வருஷமாக சீரழிச்சு தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமல் கர்நாடகாவில் தூக்கி அநியாயமாகப் போட்டீங்களே அதான் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.

2008-ம் ஆண்டு நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நின்னோமே. அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே ! மறந்துட்டீங்களா?

6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன் அதை மறந்துவிட்டீங்களா? நீங்க எல்லா கேடு கெட்ட வேலையையும் செய்துவிட்டு போன வருஷம் ரூ50,000 கொடுத்துடறேன். திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? ஆனால் இந்த டீலை பேசிவிட்டு என்னையும் திமுகவையும் சேர்த்து வைத்து கொச்சை கொச்சையாக பேசுறீங்களே அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என் கூட சப்போர்ட்டுக்குதான் வீரலட்சுமி வந்தாங்க. அவங்களை என்ன என்ன கொச்சையா நீங்க பேசினீங்க? காளியம்மாளை பிசிறு.. ம… என பேசியதை மக்கள் மறந்துவிடுவாங்களா? என விஜயலட்சுமி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமியின் ஆவேசமான வீடியோ…! சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது பிளான் வைத்திருந்தால்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்குச் சென்று விட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமியின் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறை நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார். தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூருக்குச் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்த வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமியும் வீடியோ வாயிலாக பேசி இருந்தார்.

மேலும், சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பற்றி அதிருப்தியோடு பேசி இருந்தார். திரும்பவும் சென்னைக்கு வரும் மனநிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்துத் தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினார்கள். என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமான்தான் சூப்பர். அவருக்குத்தான் தமிழ்நாட்டில் ஃபுல் பவர் இருக்கிறது. அவர் முன்னால் யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் பேசியுள்ள அவர், “எனது வழக்கின்போது, 2 விபச்சாரிகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியினர் சொன்னபோது ஆளுங்கட்சியான திமுக, எந்த அளவுக்கு இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்? ஆனால், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சீமான் ஒருபக்கம், நாம் தமிழர் கட்சியினர் ஒருபக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? கடந்த மார்ச் மாதத்தில், சீமான், மதுரை செல்வம் என்பவர் மூலமாக பேச்சுவார்த்தை வந்து, கயல்விழிக்கு தெரியாமல் நான் 50 ஆயிரம் கொடுக்கிறேன் எனக் கூறி வீடியோ வாங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார், நான் எப்படி கதறிக்கொண்டு வந்து புகார் கொடுத்தேன் என்பது எல்லோருக்கும் தெரியுமில்லையா? தெரிந்தால் கூட எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். 2011-ல் எனது வழக்கை வைத்து அஇஅதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.

வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது, எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன். இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து, நான் வாழ்வதற்கு கூட வீடு கொடுக்காமல் செய்தார்கள். தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு கூட செய்யவிடாமல் செய்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள்.

இதற்கு நான் முடிவு கட்டுவேன். பல மேட்டர் வெளியே வரும்.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. 12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு காவல்துறை ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், என் போனையும் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன். அன்றைக்குத்தான் சீமான் – விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். ஒருநாள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுப்பேன். நான் இதை விடவே மாட்டேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மன்னிப்பு கேளுங்க..! இல்லாவிட்டால் ரூ 2 கோடி கொடு …! சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அவர் புகார் கூறிய நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி செயல்பட்டார். இந்நிலையில் சீமானை வீரலட்சுமி பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

மேலும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் சேர்ந்து சமூகவலைதளங்களில் சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தனது புகாரை கடந்த 16-ம் தேதி இரவோடு இரவாக வாபஸ் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து வீரலட்சுமி, விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டிவந்தால் நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்றும் சீமானுக்கு சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து வீரலட்சுமி மீது சீமான் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தன் மீது அவதூறு பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இரண்டு ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்..?

காவல்துறையினர் என்னதான் நண்பர்களாக பழகினாலும் அவ்வப்போது அவர்களின் வேலையை காட்டிக்கொண்டே தான் இருக்கின்றார்கள் என மக்கள் வேதனைப்படுவதுண்டு. அதுவும் நைட் ரவுண்ட்ஸ் காவல்துறையினரை என்றால் சொல்வே தேவையில்லை இரவில் இயங்கும் கடைகளில் அவர்கள் செய்யும் அக்கப்போரு தாங்க முடியாது. தாம்பரம் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது வேடிக்கையான விஷயமாகும்.சென்னை, தாம்பரம் படப்பை பகுதியில் கடை நடத்தி வருபவர் பாஷா, ``இவருடைய கடைக்கு நைட் ரவுண்ட்ஸ் காவல்துறையினர் சிலர் இவருடைய கடைக்கு செல்வார்கள். நைட் ரவுண்ட்ஸீல் டீ, பிஸ்கட், கூல்ட்ரீங்ஸ், தண்ணீர்பாட்டில், கொசுவத்தி, பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டுப் பணம் கொடுக்க மாட்டார்கள். இதனை தட்டிக்கேட்க முடியாமல் பாஷா தவித்து வந்தார். காவல்துறையினரின் செயல்களால் பாஷாவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இனி இப்படி நடந்தால் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதே போல கடந்த 4-ம் தேதி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்களுடன் இரவுப் பணிக்காக படப்பை பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது, பாஷாவின் கடைக்குச் சென்ற காவல் துறையினர் டீ, பிஸ்கட், கூல்டிரிங்ஸ், பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்கி பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார்கள். அதனால் காவல்துறையினரிடம் பாஷா கெஞ்சிக்கூட பார்த்துள்ளார், `மேடம், நீங்கள் 100 ரூபாய்க்கு சாப்பிட்டுக்கொள்ளுங்கள், 500 ரூபாய்க்கு சாப்பிட்டால் எப்படி?’ எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த விஜயலட்சுமி மற்றும் உடனிருந்த காவல்துறையினர், `உன்னுடைய கடையின் லைசென்ஸை ரத்து செய்துவிடுவேன்’ என மிரட்ட,அமைதியாக இருந்த பாஷா இது குறித்த சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வெளியிட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் இரண்டு ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்? என கேள்வி எழுப்பிய பெண் காவலரின் சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வைரலாக " சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் உப்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் கண்காணிப்பாளர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.