வானதி சீனிவாசன்: திமுகவின் வாரிசு அரசியல்..! 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…!

தமிழக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்தார். அப்போது, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். திமுகவில் அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.

திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை திமுக பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.

திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் திமுக அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாஜக தான் செயல்பட்டு வருகிறது.

திமுக வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பாஜக தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தேசிய அளவில் வாரிசு அரசியலை விமர்ச்சிக்கும் பாஜக..! ஹரியானாவில் வாரிசுகளுக்கு சீட்..!

மாட்டிறைச்சி, இந்தி மொழி, கலாச்சார காவலர்கள் என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக 67 வேட்பாளர்களின் பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி காரணமாக, ஹரியானா பாஜக மூத்த தலைவரான ஷம்ஷேர் கில், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். அதாவது உக்லானா சட்டமன்றத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்று பஞ்சாயத்து வெடித்தது. ஷம்ஷேர் கில் ஒருவரின் பெயரை குறிப்பிட கட்சி தலைமை அதனை ஏற்க மறுத்து வேறு ஒருவருக்கு சீட்டை ஒதுக்கியது. இதற்கு ஷம்ஷேர் கில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“உக்லானா தொகுதி தவறாக ஒதுக்கப்பட்ட இருப்பதன் மூலம் கட்சிக்கு மட்டுமின்றி.. ஒட்டுமொத்த ஹரியானாவுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். பாஜக இனி அடல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ரத்தியா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான லட்சுமண நாபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு.. சிர்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி, சுனிதா துக்கலை வேட்பாளராக கட்சி அறிவித்தது. எனவேதான் நாபா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கெனவே, ஹரியானா பாஜக மீது வாரிசு அரசியல் புகார் இருக்கிறது. அதாவது அடம்பூர், சமல்கா, அட்டேலி, தோஷம், சார்க்கி தாத்ரி ஆகிய தொகுதிகளில், முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் மகன்/மகள்களுக்கு கட்சி சீட் ஒதுக்கியுள்ளது. தேசிய அளவில் வாரிசு அரசியலை விமர்சித்து வந்த பாஜக, ஹரியானாவில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.