வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம்தான் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருந்தார்.
யோகி ஆதித்யநாத் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பாஜக தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.
இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தொடர்ந்து சொல்லெறிபவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இந்துக்கடவுள்களைக் கொச்சைப் படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்?
உங்கள் அரசியல் வாழ்வைக் காத்துக் கொள்ள தமிழக மக்களை இனம், மொழி மற்றும் சமூக வேறுபாடுகளால் பிரித்தாள முயற்சிக்கும் உங்களுக்கு, அதை சுட்டிக்காட்டினால் எதற்கு இத்தனைக் கோபம் வருகிறது? மேலும், ஊர் முழுக்க மூன்று மொழிக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளில் “இருமொழி தான் வேண்டும்” என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும் கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என்பதை உங்கள் அறிவாலய அரசே நன்கு உணரும். இந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல், “வக்ஃப் வாரிய திருத்த மசோதா”-விற்கு எதிரான தீர்மானம் என்று நீங்கள் கிளப்ப முயலும் புது புரளியும் கூடிய விரைவில் நீர்த்துப்போகும், நீங்கள் கட்டமைத்த திராவிட மாயைகளிலிருந்து தமிழகம் கூடிய விரைவில் மீளும்! என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.