காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழா மற்றும் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க விற்கு அரசு அனுமதி அளித்ததிற்கு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, மகன் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். வன்னியர் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று , 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தந்ததற்காக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை உள்ளிட்டோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987 -ஆம் ஆண்டு போராட்டத்தில் நடத்தியதில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 1989 -ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான அரசு , இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்து கொடுத்து , அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும் , வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்தினார்.
2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் , 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று ” 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று கூறினார்.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த ஜனவரி மாதம் 28 -ஆம் தேதி நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்நிலையில் , இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராம மூர்த்தி , காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது , வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் உடனான சந்திப் பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன், நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் கூறியிருந்தார். அதற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன்” என்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் பேசுகையில், “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதல்வருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். மேலும், வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்.
அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார்” மறைந்த எங்கள் அப்பா காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழக அரசிற்கும் முதலவருக்கும் நன்றி தெரிவித்தோம்” எனத் தெரிவித்தனர்.