ரூ.50 கோடி நில மோசடி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பேருந்து அதிபரான பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி என்பிஎஸ் நகர் என்ற பெயரில் நகர்களை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம் பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் என்பவருக்கு சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

அதாவது, இந்த நிலத்தில் 7,200 சதுர அடியை தனது கார் ஓட்டுநருக்கு பொன்னுசாமி விற்பனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, எட்டிக்கண் தனது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து கிரையம் செய்த பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் பெயரில் காவல்துறை பொன்னுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அவரை மாவட்ட பொருளாதார பிரிவு காவல்துறை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையை கண்ட பொன்னுசாமி கைலி அணிந்து இருப்பதால் வேறு உடை மாற்றி கொண்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று பின்புறம் வழியாக தப்பி சென்றுள்ளார். நீண்ட நேரமாக காத்திருந்த காவல் துறை ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இந்நிலையில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமி குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர்.