தமிழிசை சவுந்தரராஜன்: மது ஒழிப்பு மாநாடா..! இல்ல மகளிர் மாநாடானு ஒண்ணுமே புரியலே..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு திருமாவளவன் தலைமையிலான நடத்தியது. இந்நிலையில்விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இதுதான் அவர்களின் கொள்கை. அதுமட்டுமல்ல, நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை.

மேலும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. அதனால், அது ஏன் அந்த வேறுபாட்டைக் காண்பிக்கிறார்கள். உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் குதர்க்கமாக பதியளித்தார்.

உளுந்தூர்பேட்டை அலை கடலென திரண்ட சிறுத்தைகள்..! பிரமாண்டமாக துவங்கிய மது ஒழிப்பு மாநாடு..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று முதலே உளுந்தூர்பேட்டைக்கு வரத் தொடங்கினர்.

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறுகின்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர்கள் செஞ்சோலை, மங்கையற்கரசி, அமுதா பொற்கொடி, சிற்றரசி உள்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை வரவேற்று பேசுகிறார்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யாவைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

மேலும் காங்கிரஸ் எம்.பி.சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி, ம.தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனிராஜா, மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் பாத்திமா முசபர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். முடிவில் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில பொருளாளா் மல்லிகையரசி நன்றி கூறுகிறார்.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க தலைமையிடத்து பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மதுவிலக்கு மாநாடு பொதுமக்கள் மட்டுமின்றி சக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொல். திருமாவளவன்: கூட்டணியில் ஒண்ணுமே நடக்கவில்லை அதனால் தமிழிசை சௌந்தரராஜன் வயிற்றெரிச்சல்

“மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார்” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை தமிழிசை சௌந்தரராஜன் முன் வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல். திருமாவளவன், பெரியார் திடலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். அதை வரவேற்றுப் பாராட்டி, சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்தேன். சமூக நீதி பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது.

பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கானது மட்டுமல்ல, சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

திராவிட பாதையில் வந்தால் திராவிட கட்சிகள் வளரவிடாது என பாஜகவினர் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை தரக் கூடிய அரசியல் தான். பெரியார் என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. சட்டப்பேரவையில் பெரியார் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அந்தளவுக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது.

தங்களுக்கு எதிரான அரசியலை பேசுவது புரிந்தும் விசிக மாநாட்டுக்கு திமுக வருகிறது என்றால் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதே பொருள். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க வேண்டும். தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கிறோம். இது ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சொன்னது தான் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்

விஜய பிரபாகரன்: “மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் தலைமை முடிவு செய்யும் ..!”

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடரும். திமுக கூட்டணியில் 2 நாட்களில் கூட மாற்றம் ஏற்படலாம்.

தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்: பாமக பிஎச்டி ..! திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார்…!

பாமக பிஎச்டி..! திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார்…! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக. இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மேலும் மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும்.

மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமக-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.

பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு திமுக எம்.பி-களும் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எனவே திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நல்ல எண்ணத்தில் தான் கூட்டத்தை நடத்தினார். தொழில் அதிபர்களின் பிரச்னையை கண்டறிய தான் அவர் கோவை வந்தார். ஆனால், அதில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது அது தவிர்க்கப்பட வேண்டியது. மதுரை மத்திய மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருணாஸ்: “மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும்.

திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்தார்.

ஹெச்.ராஜா: மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி..! மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு இல்லை…!

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

ராமதாஸ் அதிரடி: “மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான்”

மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக.

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என ராமதாஸ் தெரிவித்தார்.