இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.
ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான். இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா தெரிவித்தார்.