சீமான் கேள்வி: புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?

தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா? என சீமான் கேள்வியெழுப்பினார்.

எல்.முருகன்: புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படும்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் எல்.முருகன் தொடர்ந்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.

ஜக்தீப் தன்கர்: ‘புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்..!’’

புதிய கல்விக் கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோ யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத ஒன்று. அதை பகிர்ந்து கொண்டே இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

எழுத்தறிவை ஆர்வத்துடன் அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையை மீண்டும் அடைய முடியும். புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். புதிய தேசியக் கல்விக் கொள்கை, நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது. அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தனது தாய்மொழி மிகவும் முக்கியமானது. இந்தியா இணையற்ற மொழிவாரி பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. மொழியின் செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தேசம் இந்தியா. ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது கல்வியறிவு பெறச் செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.