பாஜகவுடன் கூட்டணியா..? குலுங்கி குலுங்கி சிரித்த வைத்திலிங்கம்..!

சென்னை எழும்பூரில் ஓபிஎஸ் அதிமுக அணி மா.செக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவோம் என அறிவித்திருந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி கோயம்புத்தூரில் மாநாடு நடத்த ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் தேதியை ஓபிஎஸ் அதிமுக அணி அறிவித்துள்ளது . இதனால், தேர்தலை நோக்கிய அரசியல் பயணத்தை ஓபிஎஸ் அதிமுக அணி தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக அணியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அதிமுக அணியினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு, ஓபிஎஸ், பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.

அப்போது வைத்திலிங்கம் குறுக்கிட்டு, நட்பு ரீதியிலான தொடர்பில் இருக்கிறோம், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி என்றார். தொடர்ந்து செய்தியாளர், நட்பு கூட்டணியாக மாற வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “உங்கள் எண்ணம் பலிக்கட்டும்” என்றார். செய்தியாளர், சுற்றிச் சுற்றி பாஜக கூட்டணி குறித்துக் கேட்டதால் வைத்திலிங்கம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

1962- ல் திமுக ஆட்சி.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சி …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும்.

திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர்.

அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார். இந்த அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது.

1962-ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962-ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.

அண்ணாமலை பொய் மூட்டை…! அண்ணாமலைக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது பிடிஆர்!

சென்னையில் அண்மையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக எதிர்த்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, அதிமுக, திராவிட இயக்கத்தினர் என பலரும் அண்ணாமலை சொன்ன விஷயம் பொய் எனக் கூறினர். அண்ணா பற்றி தவறாகப் பேசியதற்காக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். முடிவில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தி இந்து ஆங்கில நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதியிட்ட நாளிதழ்கள் என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் அண்ணா பேசினார். அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” எனத் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு தி இந்து, தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் அண்ணாமலை குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி நடந்தது தொடர்பான செய்திகளை வெளியிட்டு, அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் தான் ஆதாரத்துடன் தான் பேசுவதாகவும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அண்ணாமலையின் பேச்சுகளுக்கு பதில் அளித்தார், “எனது தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா எங்கள் கட்சியைத் தொடங்கியவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். தேவர் ஐயா ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருந்தவர், மிகவும் புலமை வாய்ந்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்தவர். இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு கருத்துகளை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர்.

1956-ல் நடந்தது என சொல்லி, எங்கேயோ படித்தேன் என சொல்லி அதற்கு எந்த ஆதாரமும் கொண்டு வராமல் ஏதோ ஒரு கருத்தை முன் வைக்கிறார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது. யாரிடம் என்ன கருத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு எதற்கு பதில் சொல்ல வேண்டும் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும். அண்ணாமலை போன்றவர்களின் பொய்யான கருத்து ஜனநாயகத்திற்கே கேடு.

எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என சிந்திப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. இந்த மாதிரியான கருத்துகளுக்கு சாதாரண நபர்கள் பதில் பேசவே கூடாது. நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது…! பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!

ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100-க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் அந்தப் பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பது என்று கூறிய எஸ்.வி.சேகர், அண்ணாமலை கதையும் இப்படித்தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது என்று பேசிய எஸ்.வி.சேகர், அதிமுக -பாஜக கூட்டணி ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார் என மிக ஆணித்தரமாக கூறினார். மேலும் அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும் என்று கூறிய அவர் தனக்கென்று ஒரு மறைமுக அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அண்ணாமலை இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் எல்லாமே சுயநலத்துடன் தன்னுடைய பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருக்கிறார் எனவும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி: ”அடுத்தாண்டு மோடி தனது வீட்டில்தான் கொடியேற்றுவார்..!”

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர். இதன்படி பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அப்போது பேசிய பிரதமர் அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என தெரிவித்தார். அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என்ற பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது.

2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது.

இதுகுறித்து கருத்து,” “எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் அங்கு செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்தது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை.

அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்” என்று கார்கே தெரிவித்திருந்தார். முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடிஜி, செவ்வாய்க்கிழமை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் சுதந்திர தின உரையே, பிரதமராக அவர் ஆற்றவிருக்கும் கடைசி உரை. ‘இண்டியா’ கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி விளையாடும். அந்தக் கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை உறுதியாக தோற்கடிக்கும்” என்று தெரிவித்தார்.

முத்தரசன் குற்றசாட்டு: டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநில செயலாளர் முத்தரசன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பாஜக பிரச்சார அலுவலகம்போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை பெற்றுத்தர வேண்டும்.

மத்திய அரசு டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலையை விமர்சித்தால்.. ஊழல் பட்டியல் ரிலீஸாகும்..!

தமிழகத்தில் கடந்த 2019 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் அந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெல்லவில்லை,2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து 4 எம்எல்ஏக்களை பாஜக வென்றது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். மேலும் வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு சட்டசபையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்த வார்த்தையால் விமர்சித்தார். அப்போதும் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது இரு தரப்புக்கும் சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானமாக போவதுமாக இருந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அரசியல் கத்துக்குட்டி என விமர்சித்ததும் பதிலுக்கு அண்ணாமலை, அவரை விஞ்ஞானி அமைச்சர் என கிண்டல் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ள நிலையில் பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், தேசபக்தி நிறைந்த பொது மக்கள் இதயத்திலும் அதிக நன் மதிப்பை எங்கள் மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பெற்று உள்ளதை உலகம் அறியும்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்டதலைவர்கள் திரு.செல்லூர் ராஜ், திரு ஜெயக்குமார் உள்பட சிலர் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை எங்கள் மனதை புண் படுத்தி உள்ளது. தங்களுடைய இயக்க தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளனர்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதா போன்று தங்களை நினைத்து கொண்டு நான்கு, ஐந்து அணிகளாக அதிமுக பிளவு பட்டதை மறந்து எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தற்போது ஆளும் கட்சியான திமுக தொடர் ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் செல்வாக்கை இழந்து 15% குறைவான வாக்கு வங்கியை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு பணம் கொடுத்து குண்டர்களை வைத்து மிரட்டி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வருவதை தமிழக மக்கள் அறிவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய” தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை இடம் பெற வைத்ததை தாங்கள் நன்றி மறந்து விட்டீர்கள். இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும்.

ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியை தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம் என்பதை நினைவு படுத்துகிறோம்.

புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னத்தின் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக அமைதி காக்கின்றோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமில்லை. இனிவருகின்ற காலங்களில் உங்கள் இயக்க தலைவர்கள் எங்கள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.