பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய் வழக்கு பதிவு செய்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம்..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சோதனையின்போது இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய்வழக்கு போட முயன்ற சம்பவத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சிசிடிவி பதிவில், மும்பை இளைஞர் ஒருவரை பிடித்து இரண்டு காவலர்களை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மற்றும் இரண்டு காவலர்கள் சற்றுதொலைவில் ஒதுங்கி நிற்கின்றனர். அப்போது சோதனையிடும் காவலர் ஒருவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை இளைஞரின் பின்பாக்கெட்டுக்குள் எடுத்துவைக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞர் 20 கிராம் மெபெட்ரோன் வைத்திருந்தாக கூறி வழக்குப் பதிவு செய்கின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியிலிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது தான் உண்மை என்ன என்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரிடம் சோதனை நடத்திய காவலர்கள் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நேற்று முன் தினம் இரவு திருமுருகன்பூண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே காரில் சென்ற வாலிபர்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் போதையில் இருந்துள்ளனர்.

இதற்கு, அபராதம் விதித்தால் நீதிமன்றத்திற்கு சென்று கட்ட நேரிடும் என கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். வாலிபர்கள் ரூ.5 ஆயிரம் தர முன்வந்தனர். பணம் இல்லாததால் காவலர் குணசுதனை காரில் அழைத்து சென்று அவிநாசியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் ரூ.7 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளனர். மேலும், காரில் இருந்த பீர் பாட்டில்களையும் குணசுதன் பெற்றுள்ளார். விலை உயர்ந்த புளூடூத் ஹெட்செட்டையும் எடுத்து வைத்துள்ளார்.

இதை அறிந்து மாநகர காவல் கண்காணிப்பாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரூ.6.25 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் 2022 மார்ச் 17-ம்தேதி முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஆந்திராவில் இருந்துவரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து,கடந்த 10-ம் தேதி காலை பணி முடிந்து காரில் அவரது வீட்டுக்கு புறப்பட்டார். ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள அவரது வீட்டின் அருகே சென்றபோது, வசந்தியின் காரை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை மடக்கி சோதனையிட்டனர். வசந்தி காரில், வெள்ளை நிற கவரில் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் கணக்கில் வராத முறைகேடாக பெற்ற பணம் என்பது தெரிய வந்தது. பின்னர் இதுதொடர்பான அறிக்கை மற்றும் எப்.ஐ.ஆர் நகல் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி முறைகேடாக பணம் பெற்றது தெரிய வர வசந்தியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.