ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். வழக்கறிஞர் கண்ணனை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறைதுறை முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை..!

இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் உதகமண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .

இந்த மனுவுக்கு தீர்வு சொல்லாமல் பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை நாராயணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. முடிவில் அப்போது அங்கு வட்டாட்சியராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், பணம் கொடுத்தால் தான் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பாத நாராயணன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த 01-11-2010-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வட்டாட்சியர் கனகத்துக்கும் ரூ.500 பணத்தை சாஸ்திரி ஆகியோருக்கும் நாராயணன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, வட்டாட்சியர் கனகம் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

வடிவேலு வழக்கில் சிங்கமுத்து 2 வாரம் கால அவகாசம் நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000 முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாகும்.

இந்நிலையில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து அவகாசம் கோரினார். நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு இட்டார்.