தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “விண்வெளி ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. சரியாக ஓராண்டுக்கு முன் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக இறங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அதோடு, இந்த வரலாற்று நிகழ்வு விண்வெளி ஆய்வில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்தியது.
இந்த நிகழ்வை அடுத்தே, ஆகஸ்ட் 23 -ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும், சந்திரயான் -3 தரையிறங்கிய தளத்திற்கு ‘சிவ சக்தி பாயின்ட்’ என்று பெயரிடப்படும் என்றும் கூறினார். அதன்படி நடைபெறும் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளாக, “நிலவைத் தொடும் போது வாழ்க்கையைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பதாக அறிவிக்கப்பட்டது.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்குவதற்காக கடினமாக உழைத்தவர்கள் நமது விஞ்ஞானிகள். இந்த முழு சாதனையின் பெருமை நமது பிரதமரையே சாரும். போதுமான வளங்கள் இன்றி நமது விண்வெளித்துறை கடந்த 60 வருடங்களாக இயங்கிவந்தது. அந்த நிதி சிக்கலில் இருந்து நமது விண்வெளித் துறையை விடுவிக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
இதன் காரணமாக விண்வெளித் துறையில் 3-4 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்த விதம், அதன் விளைவுதான் இன்று உலக நாடுகளிலேயே இந்தியா விண்வெளித் துறை முதலிடம் வகிக்கிறது. அடுத்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. ககன்யான் மிஷன் என்றாலே 2025-ம் ஆண்டு நினைவில் நிற்கும். தற்போதைய எங்கள் திட்டத்தின்படி 2035-ல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும். 2040-ல் ஓர் இந்தியர் நிலவில் இறங்குவார்” என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.