கின்னஸ் சாதனை: 28 லட்சம் விளக்கொளியில் ஜொலித்த அயோத்தி..!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு,இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.

வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன.

விளக்கொளியால் ஏற்படும் மாசுவை குறைக்க கோயிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். ஆகையால், இந்த தீப உற்சவத்தை பக்தர்கள் பார்வையிட ஆங்காங்கே LED திரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது எதிர்காலத்தில் பொது போக்குவரத்தை தனியார் மயமாக்கும்..!

தீபாவளிக்கு பொதுமக்களின் நலன் கருதி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்துக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது.

இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு போக்குவரத்து துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி ஆட்டைய போட்ட பாஜக நிர்வாகி..!

தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொழில் பிரிவு மண்டல பாஜக செயலாளரான பிரதாப் சிங். திருப்பூர் மண்ணரை சத்யா காலனி பகுதியை சேர்ந்த பாஜக வடக்கு தொழில் பிரிவு மண்டல செயலாளர் செந்தில்குமார் என்பவர் நடத்திய சிட் பண்ட் நிறுவனத்தில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார். பிரதாப் சிங் 53 வாரங்களுக்கு வாரம் ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10,600 செலுத்தினார்.

மேலும் பிரதாப் சிங்கின் உறவினர்களும் தீபாவளி சிறு சேமிப்பில் சேர்ந்து ரூ.2.39 லட்சம் செலுத்தியுள்ளனர். இதேபோல் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ.1.5 கோடி வரை பணம் செலுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த பணத்தை திரும்ப கேட்டபோது செந்தில்குமார் இழுத்தடித்து அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து பிரதாப் சிங் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டமோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகின்றது.

எஸ் வி எஸ் நகைக்கடையில் நகை சீட்டில் பணத்தை இழந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலத்தை அடுத்த வலசையூரைச் சேர்ந்த சபரி சங்கர், சேலம் அம்மாபேட்டையில் எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினார். பின்னர், சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், அரூர், தர்மபுரி, திருச்சி, மற்றும் கோவை ஆகிய இடங்களிலும் கிளைகளைத் தொடங்கினார். இங்கு நகை விற்பனை மட்டுமின்றி, நகை சீட்டு திட்டம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் பழைய நகைகளுக்குப் புதிய நகைகள் வழங்குவது, டெபாசிட்டுக்கு 2.50 ரூபாய் வட்டி எனப் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த நிறுவனம் பெற்றது.

மேலும் பழைய நகைக்கு அதே மதிப்பில் புதிய நகைகள் விற்பனை, செய்கூலி, சேதாரத்தில் சலுகை, இலவச பரிசுகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் நகை சீட்டு திட்டத்தில் கோடிக்கணக்கில் கொட்டினர். நகை சீட்டுத் திட்டம் குறித்து புரமோஷன் செய்வதற்காகவே ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களை ஒவ்வொரு கிளைகளிலும் சபரி சங்கர் பணிக்கு அமர்த்தி இருந்தார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்த எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகள் மூடப்பட்டன. ஒரே நேரத்தில், வெளியூர்களில் இயங்கி வந்த கிளை நிறுவனங்களும் மூடப்பட்டன. தீபாவளி நகை சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், பண்டிகையையொட்டி புதிய நகைகளை வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றபோதுதான், கடைகள் மூடப்பட்டு இருந்த விவரமே அவர்களுக்குத் தெரிய வந்தது.

இதற்கிடையே, பல கோடி ரூபாய் நகை, பணத்துடன் கடை உரிமையாளர் சபரி சங்கர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரவியது. இந்தக் கடையில் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே சரியாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள், சீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள எஸ்விஎஸ் நகைக்கடைகளின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரத்தில் செயல்பட்டு வந்த எஸ் வி எஸ் நகைக்கடை மாதந்தோறும் ஏழை, எளிய மக்கள் மாதம் ஆயிரம் ரூபாய் மாதாந்திர நகைச்சீட்டில் பணம் செலுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் செய்வதறியாது திகைத்த ஏழை, எளிய மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளனர். நகை சீட்டு மற்றும் டெபாசிட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வலை விரித்து 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நகைக்கடை அதிபரால் பணத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது உள்ளனர்.