வாக்குச்சாவடி இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74 ஏவி எண் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் 1200 வாக்காளர்கள் வாக்கு உரிமம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அப்பள்ளியில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் பாத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி மையத்தை மாற்றி அமைக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கொத்தகுப்பம் பழைய வாக்குச்சாவடி பள்ளி முன்பு திரண்டு வாக்குச்சாவடி மாற்றம் செய்வதை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது..!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமனை, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.